மசோதாக்கள், அரசாணைகளை கிடப்பில் போடுகிறார்: ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும். இதற்கு கால வரம்பு நிர்ணயம் செய்யவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 198 பக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், அரசு உத்தரவுகள், அரசின் கொள்கை முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலமாக ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார். அரசியலமைப்பு சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமைகளை செய்யாத அவரது செயல்படாத தன்மையையே இது காட்டுகிறது.

நிர்வாகப் பணிகள் ஸ்தம்பிப்பு: தமிழக அரசுக்கு அவர் போதியஒத்துழைப்பு அளிக்காமல் எதிர்மறையாக செயல்படுவதால், அரசு நிர்வாகப் பணிகள்ஸ்தம்பித்துப் போய் உள்ளன.

மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர், அரசியல் அழுத்தம் காரணமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலஅரசுக்கு எதிரான போக்கை கடைபிடிக்கிறார். பல்வேறு ஊழல் வழக்குகளில் தொடர்பு உடைய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு பொது ஊழியர்களுக்கு எதிரான சிபிஐ விசாரணைக்கும், ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கும் விஷயத்திலும் உரிய ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி நியமன விவகாரம்: டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்கள் நியமன விவகாரத்திலும் மாநிலஅரசின் நடவடிக்கைகளுக்கு முரணாகசெயல்படுகிறார். இதனால், தலைவர்மற்றும் 14 உறுப்பினர்களுடன் செயல்பட வேண்டிய டிஎன்பிஎஸ்சி தற்போது4 உறுப்பினர்களுடன் செயல்படுகிறது. இதுபோன்ற நியமனங்களுக்குபலமுறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் செவிசாய்க்காமல், அரசின்பரிந்துரைகளை திருப்பி அனுப்பியுள்ளார்.

ஆளுநரின் போக்கு குறித்து குடியரசுத் தலைவரை மாநில சட்டத் துறை அமைச்சர் நேரில் சந்தித்து முறையிட்ட பிறகும், பலன் இல்லை.

ஆளுநரின் செயல்படாத போக்கு காரணமாக, அரசியலமைப்பு சட்டத்தலைவரான ஆளுநருக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் அரசியலமைப்பு சட்ட ரீதியாக முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் மசோதாக்களுக்கு இயன்றவரை விரைவாக முடிவு எடுத்து ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவருக்கு உடன்பாடு இல்லை என்றால், திருப்பி அனுப்ப வேண்டும். அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். அதை விடுத்து, மசோதாக்களை நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்திருப்பது சட்டவிரோதம். 2-வது முறையாக தமிழக அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு அவர் சட்டரீதியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் சட்ட வரையறை அளித்துள்ளது.

நீதிமன்றம் கண்டனம்: பேரறிவாளன் விடுதலைதொடர்பான வழக்கில் ஆளுநரின் செயல்பாடுகளை உச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது. அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள அதிகாரங்களை மீறி,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்.

அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள அடிப்படை உரிமைகளை யாரும் மறுக்க முடியாது என்பதற்கும், அமைச்சரவையின் முடிவுகளே மேலானது என்பதற்கும் கேசவானந்த பாரதி, நபம் ரெபியா போன்ற பல்வேறு முக்கிய வழக்குகளில் ஏற்கெனவே தீர்வு காணப்பட்டுள்ளது.

19 மசோதாக்கள், கோப்புகள்: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட துணைவேந்தர்கள் நியமனம், தமிழ்நாடு மீன்வளம், கால்நடை, வேளாண் பல்கலைக்கழகங்கள், சென்னை பல்கலைக்கழகம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடர்பான திருத்த விதிகள், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல்வழக்குகள் மீதான மேல் நடவடிக்கை, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜி.பாஸ்கரனுக்கு எதிரான விசாரணை உள்ளிட்ட 19 மசோதாக்கள், நன்னடத்தை அடிப்படையில் 54 கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது போன்ற கோப்புகளில் ஆளுநர் கடந்த 2020-ம் ஆண்டு முதல்இதுவரை முடிவு எடுக்கவில்லை.

அரசியல் சாசனத்துக்கு எதிரானது: ஆளுநரின் இந்த செயல் அதிகார துஷ்பிரயோகம் மட்டுமின்றி, அரசியல் சாசனத்துக்கும் எதிரானது. அவர் தனதுதனிப்பட்ட செயல்பாடுகள் மூலம் மக்களின் உரிமைகளை பறிக்க முயற்சிக்கிறார். எனவே, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கும், தமிழக அரசாணைகளுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த ஒப்புதலுக்கு கால வரம்பும் நிர்ணயம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.