மீண்டும் வருகிறார் ரம்பா

ஒரு காலத்தில் ரசிகர்களுக்கு உள்ளத்தை அள்ளி தந்தவர்களில் முக்கியமானவர் ரம்பா. 'தொடை அழகி' என்று வர்ணிக்கப்பட்டவர். தனது 15 வயதிலேயே நடிகையாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தார். 1993ல் 'உழவன்' படம் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தார். அடுத்த 20 வருடங்கள் இந்திய திரையுலகில் கொடி கட்டிப் பறந்தார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். தற்போது திருமணமாகி 3 குழந்தைகளுடன் குடும்பத் தலைவியாக வாழ்ந்து வருகிறார். இவர் காலத்து நடிகைகளான சிம்ரன், லைலா, ஜோதிகா, அபிராமி உள்ளிட்ட பலர் தற்போது அடுத்த ரவுண்டில் நடித்து வருவதால் ரம்பாவுக்கும் நடிப்பின் மீதான ஆர்வம் மீண்டும் வந்துள்ளது.

இது குறித்து நடிகை ரம்பா கூறியிருப்பதாவது: திரையுலகில் வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கனவுக்கன்னி அடையாளமும் புகழும் எனக்கு கிடைத்தது. அதை நினைத்து எப்போதும் எனக்கு பெருமை தான். நான் நடிக்கும் காலத்தில் மிக ஜாலியாக சுட்டிப்பெண்ணாக இருந்தேன். திருமணத்திற்கு பிறகு கூட எல்லோரும் கேட்டுக் கொண்டதால் டிவிக்களில் ஷோக்களில் கலந்து கொண்டேன். ஆனால் குழந்தைகள் என்னை மிஸ் செய்கிறார்கள் எனத் தெரிந்தபோது, அதையும் நிறுத்தி விட்டேன். இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன் என அழகான குடும்பம், ஒரு நடிகையாக நான் உணர்ந்ததே இல்லை, ஒரு நல்ல அம்மாவாக மனைவியாகவே இருந்தேன்.

இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். இப்போதும் ரசிகர்கள் என்னை ஞாபகமாக கேட்பதும் பாராட்டுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் அன்புதான் மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டியது. சினிமாவை தொடர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கிறேன், இப்போது சினிமாவில் டிரெண்ட் மாறியிருக்கிறது. ஆனால் சினிமா என்றுமே மாறாது. இப்போதும் சினிமா நண்பர்களுடன் பல விசயங்கள் பேசிக்கொண்டு இருப்பேன், என் வயதுக்கேற்ற வித்தியாசமான கதாப்பாத்திரங்களில், நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். ரசிகர்கள் என்னை விரைவில் திரையில் பார்க்கலாம். என்கிறார் ரம்பா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.