Indian Railways: Paytm நிறுவனம் ரயில் டிக்கெட் முன்பதிவுக்காக ‘Guaranteed Seat Assistance’ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் பயனர்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது உறுதிப்படுத்தப்பட்ட இருக்கையை பெறுவதை உறுதி செய்கிறது. இது பயனர்களுக்கு பல்வேறு ரயில் ஆப்ஷன்களை வழங்குகிறது, அவர்கள் தேர்ந்தெடுத்த ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை (Confirm Ticket) முன்பதிவு செய்ய உதவுகிறது.
Guaranteed Seat Assistance என்ற இந்த அம்சம், குறிப்பாக தீபாவளி போன்ற அதிக தேவையுள்ள பண்டிகைக் காலங்களில், டிக்கெட் கிடைக்காதது அல்லது நீண்ட வெயிட்டிங் லிஸ்ட் உள்ளிட்ட பிரச்னைகளை நீக்கி, பயணிகளுக்கு நிம்மதி அளிக்கும் என தெரிகிறது.
இந்த அம்சம், அருகில் உள்ள பல்வேறு ரயில் புறப்படும் நிலையங்களில் இருந்து மாற்று ரயில் முன்பதிவு ஆப்ஷன்களை பரிந்துரைப்பதன் மூலம் பயனர் வசதியை மேம்படுத்துகிறது, இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவதற்கான வாய்ப்பை கணிசமாக அதிகரிக்கிறது. அந்த அம்சத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இதில் காணலாம். மேலும், இதை பயன்படுத்த Paytm செயலியில் ரயில் டிக்கெட் புக் செய்யும் பகுதிக்கு செல்லவும்.
Paytm நிறுவனத்தின் Guaranteed Seat Assistance என்ற இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த படிப்படியான வழிமுறையை இதில் காணலாம்.
– நீங்கள் செல்ல வேண்டி இடத்தை நோக்கி செல்லும் ரயில்களுக்கான தேடலைத் தொடங்கவும்.
– நீங்கள் தேர்ந்தெடுத்த ரயிலின் டிக்கெட்டுகள் நீண்ட காத்திருப்புப் பட்டியலில் இருந்தால், உங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான ‘Alternative Station’ ஆப்ஷனை நீங்கள் கவனிப்பீர்கள்.
– இந்த அம்சம் அருகிலுள்ள மாற்று நிலையங்களில் இருந்து டிக்கெட் கிடைப்பதை காண உங்களை அனுமதிக்கிறது.
– இங்கிருந்து, உங்களுக்கு விருப்பமான போர்டிங் ஸ்டேஷனில் இருந்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இதன்மூலம், நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளை பெற அதிக வாய்ப்பு ஏற்படும். இருப்பினும், கண்டிப்பாக கிடைக்கும் என்றில்லை. நீங்கள் பார்க்கும் Alternate Station-இல் இருந்து நீங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு அதிக கிராக்கி இருந்தால் டிக்கெட் கிடைப்பது கடினம்தான். இருப்பினும், Guaranteed Seat Assistance என்ற இந்த Paytm நிறுவனத்தின் புதிய அம்சத்தை பயன்படுத்தி, உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை புக் செய்யும் வாய்ப்பை பெறலாம்.