கீச்சிடும் குருவிகளோ காற்றில் சலசலக்கும் இலைகளோ இல்லாமல் ஒரு மரத்தை நினைத்து பார்க்க முடியுமா? என்ன கேள்வி இது. மரமென்றாலே இலைதழைகளில்லாமல் இருக்க முடியுமா என்ன? இருக்க முடியுமே.
வேரும் தண்டும் இல்லாமல் வெறும் திரவத்தை மட்டுமே வைத்து ஒரு மரத்தையே செர்பியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். ஆமாம் வெறும் திரவத்தினால் ஆன மரம். நாம் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடை உரிந்து கொண்டு ஆக்ஸிஜனை வெளியேற்றும் சாதாரண மரம் செய்யும் வேலையை செய்கிறது இந்த திரவமரம்.
IHME குளோபல் ஹெல்த் டேட்டா பரிமாற்றக் கருவியின் அறிக்கையின் படி எச்.ஐ.வி , காசநோய் மற்றும் மலேரியாவால் பாதிக்கப்பட்டு இறந்த அதே அளவு மக்களே மாசுபாடால் இறக்கின்றார்கள்.
மோசமான காற்றின் தரத்தின் அடிப்படையில் செர்பியா உலக அளவில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் டாக்டர். இவான் ஸ்பாசோஜெவிக் என்னும் ஆராய்ச்சியாளர் லிக்விட் 3 என்னும் திரவத்தை கண்டுபிடித்துள்ளார். இது 600 லிட்டர் திரவம் உடைய கண்டுபிடிப்பு. இந்த திரவத்தில் நுண்பாசிகள் (micro-algae) அடங்கியுள்ளது. இந்த நுண்பாசிகள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சிக்கொண்டு ஒளிச்சேர்க்கையின் மூலம் ஆக்ஸிஜனை தயாரிக்கிறது. இந்த நுண்பாசிகள் பத்து வயதுடைய இரண்டு மரங்களின் திறமைகளுக்கு சமமானது. அல்லது 200 சதுர அடியுள்ள புல்தரையின் திறமையுடையது. எனினும் இந்த திரவமானது மரங்களை விட பத்து முதல் ஐம்பது மடங்கு பயன்னுள்ளதாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
லிக்விட் 3 என அழைக்கப்படும் இந்த திரவ மரமானது மரங்களுக்கோ காடுகளுக்கோ மாற்றாக பயன்படுத்தாமல் நகர்ப்புற காற்றை சுத்திகரிக்கும் ஒரு பொருளாகவே பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செடியோ மரமோ நடுமளவுக்கு இடமில்லாத மக்கள் தொகை அதிகம் இருக்கும் இடங்களில் இந்த லிக்விட் 3 ஆனது பெரிதும் உதவக்கூடியது. இந்த லிக்விட் 3 -யை ஒரு பெஞ்ச்சாகவோ, அல்லது நமது மொபைலுக்கு சார்ஜ் போடும் இடமாகவோ, சோலார் பேனலாகவோ அல்லது இரவில் ஒலிக்காகவோ பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த லிக்விட் 3 ஆனது ஒற்றை செல்லுடைய நன்னீர் நுண்பாசிகளை பயன்படுத்துகிறது. இவ்வகை பாசியானது குளத்து நீரிலோ அல்லது குழாய் தண்ணீரிலோ எளிதாக வளரும். இது அதிகமான வெப்ப நிலையிலோ அல்லது குறைவான வெப்ப நிலையிலோ தாக்குப்பிடிக்கும் திறமையுடையது. மேலும் இந்த திரவமானது அதிகமான பராமரிப்பு தேவை இல்லாத பொருளாகும். இவ்வகை நுண்பாசிகளால் உரங்கள் முதல் பயோமாஸ் முதலான எரிபொருள்களை தயாரிக்கலாம்.