புதுடெல்லி: “அரசியலமைப்பை மோடி அரசு தவறாகப் பயன்படுத்துகிறது” என்று எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்களுக்கு ஆப்பிள் அனுப்பிய ‘ஹேக்கிங்’ அலர்ட் செய்தி குறித்து மக்களவை எம்.பி கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தவறு செய்பவர்களை மத்திய அரசே தன் பக்கம் வைத்துள்ளது. பின்னர் அவர்கள் ஏன் எதிர்க்கட்சிகளைப் பற்றிப் பேச வேண்டும். பாஜக ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததில் இருந்து அரசியலமைப்புக்கு முரணான செயல்களை செய்து வருகிறது. பாஜகவைச் சேர்ந்தவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிலர் ஜாமீனில் வெளியே இருக்கிறார்கள். அரசியலமைப்பை மோடி அரசு தவறாகப் பயன்படுத்துகிறது” என்று கூறினார்.
பின்னணி என்ன? – முன்னதாக, சிவசேனா உத்தவ் பிரிவு எம்.பி பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பிமஹுவா மொய்த்ரா, ஆம் ஆத்மிஎம்.பி ராகவ் சதா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி எம்.பி ஒவைசி, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் ஆகியோர் உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலரின் ஐ-போன்களில் நிதியுதவி மற்றும் நவீன வசதிகள் பெற்ற சிலர் ஊடுருவ முயற்சிப்பதாக, அவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை மேற்கண்ட தலைவர்கள் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர்களின் ஐ-போன்களை ஒட்டுக் கேட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “இந்த விவகாரத்தில் மத்திய அரசு அக்கறை செலுத்துகிறது. இதன்பின்னணியில் செயல்படுபவர்களின் விவரம் அறியப்படும். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளோம். ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை இந்தியாவுக்கு மட்டும் விடுக்கவில்லை. உலகம் முழுவதும் 150 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, மதிப்பீடு அடிப்படையில் இந்த எச்சரிக்கையை ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ளது. குறிப்பிடும்படியான தகவல் அவர்களிடம் இல்லை என்பது அவர்கள் அனுப்பிய இ-மெயிலில் தெரிகிறது” என்றார்.
இது குறித்து ஆப்பிள் நிறுவனம் கூறுகையில், “நல்ல நிதியுதவி மற்றும் நவீன வசதிகள் பெற்ற சிலர் ஐபோன்களில் ஊடுருவும்பணியில் அவ்வப்போது ஈடுபடுகின்றனர். இது போன்ற எச்சரிக்கை விடுவதற்கான காரணம் பற்றிய தகவலை அளிக்க முடியாது. சில எச்சரிக்கைகள் பொய்யாக இருக்கலாம், சிலவற்றை கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம்” என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.