இரத்மலானையிலுள்ள ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) பட்டதாரி கற்கைகள் பீடத்தில் நடைபெற்ற 14வது ஆசிய குற்றவியல் மாநாட்டின் நிறைவு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் (அக் 29) கலந்து சிறப்பித்தார்.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியான பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொத்தலாவலை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ரியர் அட்மிரல் எச்.ஜி.யு தம்மிக்க குமார வரவேற்றார்.
“குற்றம் மற்றும் குற்றவியல் நீதி: ஆசியாவில் நிலையான அபிவிருத்தி, அமைதி மற்றும் பாதுகாப்பு” என்ற தொனிப்பொருளின் கீழ் ஆசிய குற்றவியல் சங்கம் (ACS) மற்றும் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் நீதி பீடம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இம்மூன்று நாள் மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை (27) தொடங்கியது.
நிறைவு நாள் அமர்வின் பிரதான உரையை பிரதம அதிதியான பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய நிகழ்த்தினார்.
சீனாவின் மக்காவ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜியாங்ஹோங் லியூ அவர்களால் விஷேட உரை நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வின் போது பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் குணரத்ன பிரதம நீதியரசர் மற்றும் பேராசிரியர் லியூ ஆகியோருக்கு நினைவுச் சின்னங்களை வழங்கினர்.
இந்நிகழ்வின் போது ஆய்வுக் கட்டுரைகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய குற்றவியல் சங்கத்தின் (ACS)தலைவர், பேராசிரியர் ஆர். திலகராஜ், புத்திஜீவிகள் மற்றும் ஏ.சி.எஸ் மற்றும் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இம்மாநாடு பங்கேற்பாளர்களுக்கு விளக்க உரைகள், குழு மற்றும் வட்ட மேசை விவாதங்கள், சுவரொட்டி விளக்கக்காட்சிகள் மூலம் அவர்களின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள், எதிர்கால ஒத்துழைப்புகள் மற்றும் குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதித் துறையில் முன்னேற்றம் ஆகியவற்றைப் பரப்புவதற்கு ஒரு மேடையை வழங்குகிறது.
எதிர்வரும் 15வது மாநாடு 2024 ஜூலை 4-6 வரை பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெறவுள்ளது.