81கோடி இந்தியர்களின் தொலைபேசி எண், ஆதார் எண், முகவரி, பாஸ்போர்ட் உள்ளிட்ட தரவுகள் கசிந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவிட் தொற்று காலங்களில் கோவிட் பரிசோதனைக்காக இந்தியர்களின் தொலைபேசி எண், ஆதார் எண், முகவரி உள்ளிட்ட தரவுகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் (ICMR) சேகரிக்கப்பட்டது. இந்த தரவுகள் அனைத்தும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வரில் பாதுகாக்கப்பட்டும் வந்தது. இந்நிலையில் 81கோடி இந்தியர்களின் தொலைபேசி எண், ஆதார் எண், முகவரி, பாஸ்போர்ட் உள்ளிட்ட தரவுகள் ஹேக் செய்யப்பட்டு டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தத் தரவுகள் ஹேக் செய்யப்பட்டு பெரிய தொகைக்கு விற்கப்பட்டிருக்கலாம் என்றும் இதுவரை நடந்ததிலேயே இதுதான் மிகப்பெரிய ஹேக் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
இதையடுத்து இந்தத் தகவல் உண்மையா, இதைச் செய்தது யார் என்று கண்டுப்பிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது சிபிஐ. மருத்துவ அமைச்சகமும் இது குறித்து தீவிர விசாரனை நடத்தி வருகிறது.
சமீபத்தில், எதிர்க் கட்சி தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் ஐ-போன் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், அவர்களின் தரவுகளை அரசின் ஆதரவில் செயல்படும் ஹேக்கர் குழு தனிப்பட்ட முறையில் குறிவைத்து ஹேக் செய்வதாகவும் ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்குமுன், 2021-ல் ‘பெகாசஸ்’ என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள பல முக்கியத் தலைவர்கள், பிரபலங்கள், பத்திரிகையாளர்களின் லேப்டாப், ஸ்மார்ட்போன்களில் ஊடுருவியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுதவிர பலமுறை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆதார் தரவுகள் ஹேக் செய்யப்படுவதாகவும், அது பெரு நிறுவனங்களுக்கு விற்கப்படுவதாகவும் எச்சரித்து வருகின்றனர்.
இப்படி, இந்தியார்களின் தனிப்பட்ட தகவல்களும், அரசின் தரவுகளும் தொடர்ந்து ஹேக் செய்யப்படுவது பெரும் அச்சுறுத்தலையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்துகிறது. இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுத்து சைபர் பாதுகாப்பை மேம்படுத்தி உறுதி செய்ய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.