விஜயபுரா ; மஹாராஷ்டிராவில் கர்நாடகா அரசு பஸ் எரிக்கப்பட்டதால், விஜயபுராவில் இருந்து, மஹாராஷ்டிராவுக்கு இயக்கப்படும் அரசுக்கு சொந்தமான 42 சொகுசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
மஹாராஷ்டிராவின் பீட், தாராஷிவ் ஆகிய மாவட்டங்களில், மாரத்தா இடஒதுக்கீடு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பீதர் மாவட்டம், பால்கியில் இருந்து மஹாராஷ்டிராவின் புனேக்கு, கல்யாண ரதம் என்ற அரசு சொகுசு பஸ், 40 பயணியர் உட்பட 42 பேருடன் புறப்பட்டு சென்றது.
தாராஷிவ் துரோரி கிராமத்தில், பஸ்சை மறித்த போராட்டக்காரர்கள், பயணியரை இறக்கிவிட்டு பஸ்சுக்கு தீ வைத்தனர். இதில் பஸ் முழுதும் எரிந்து நாசமானது. மாற்று பஸ்சில் பயணியர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பஸ்சுக்கு தீ வைக்கப்பட்டதன் எதிரொலியாக, விஜயபுரா மாவட்டத்தில் இருந்து மஹாராஷ்டிராவின் புனே, மும்பை, லத்துார், நந்தட், துல்ஜாபூர் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் 42 கல்யாண ரதம் சொகுசு பஸ்கள் சேவை, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சோலாப்பூர், சாங்கிலி, மீரஜ் பகுதிகளுக்கு வழக்கம் போல பஸ்கள் செல்கின்றன. இதுபோல பெலகாவியில் இருந்து மஹாராஷ்டிராவின் பல பகுதிகளுக்கு இயக்கப்படும், கர்நாடகா அரசு பஸ்கள் இரு மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பயணியர் சிரமம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் ராமலிங்கரெட்டி விஜயபுராவில் நேற்று அளித்த பேட்டி:
மஹாராஷ்டிராவில் நடக்கும் மாரத்தா இடஒதுக்கீடு போராட்டத்திற்கும், கர்நாடகாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், கர்நாடகா அரசு பஸ் அங்கு எரிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
கர்நாடகா பஸ்கள் மீதான தாக்குதலை, மஹாராஷ்டிரா அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பஸ்களுக்கு தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மஹாராஷ்டிரா அரசு பஸ்கள், கர்நாடகாவுக்குள் எந்த பிரச்னையும் இன்றி வந்து செல்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
பஸ் விலை ரூ.1.77 கோடி!
கல்யாண ரத பஸ்களை, கல்யாண கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்தது. குளிர்சாதன படுக்கை வசதி கொண்டது. 40 பயணியர் பயணம் செய்ய முடியும்.பெங்களூரில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் அறிமுகம் செய்த அம்பாரி உத்சவ் பஸ்களுக்கு இணையான வசதிகள், இந்த பஸ்களில் இருக்கும். ஒரு பஸ்சின் விலை 1.77 கோடி ரூபாய்.மல்டி ஆக்ஸில் என்ற மிக அதிநவீன சொகுசு பஸ்களான இவற்றுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்