பெங்களூரு ; வருவாய் துறைக்கு சொந்தமான ஈத்கா மைதானத்தில், இன்று முதல் 3ம் தேதி வரை ராஜ்யோத்சவா விழா கொண்டாட நிபந்தனையுடன், கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள, வருவாய் துறைக்கு சொந்தமான ஈத்கா மைதானத்தில், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே விழா கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
இதை கண்டித்து, கடந்த பா.ஜ., ஆட்சியில், சாம்ராஜ்பேட்டை குடிமக்கள் நல சங்கத்தினர், சுதந்திர தினம் கொண்டாட அனுமதி கோரினர். நீதிமன்ற அனுமதியுடன் விழா கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி கொண்டாட சங்கத்தினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், கன்னட ராஜ்யோத்சவா, நகர தெய்வம் அண்ணம்மா தேவி விழா, கன்னட கலாசார நிகழ்ச்சிகளை நடத்த, மாவட்ட கலெக்டரிடம், அக்., 17ம் தேதி அனுமதி கோரி மனு அளித்தனர்.
மனுவை பரிசீலித்த கலெக்டர், ‘தற்போது மைதானத்தில் உள்ள நிலை தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த பின்னணியில் அனுமதி அளித்தால், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும். எனவே, அனுமதி வழங்க முடியாது’ என்று பதில் கடிதம் எழுதியிருந்தார்.
இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இம்மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி பாலசந்திர வரலே, நீதிபதி கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், ‘மாநில கொடி மட்டுமே ஏற்றப்படும். வேறு எந்த கொடியும் ஏற்றப்பட மாட்டாது’ என உறுதியளித்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்டதையும், கர்நாடக ராஜ்யோத்சவாவையும் மாநில மக்கள் கொண்டாட வேண்டும். அனைத்து மதத்தினரும் மூன்று நாட்களுக்கு கொண்டாடலாம்.
இதுபோன்ற விழாவுக்கு மாநில அரசு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்க கூடாது. கர்நாடக ராஜ்யோத்சவாவை மாநில அரசே கொண்டாடும்போது, இங்கு மட்டும் ஏன் குறுக்கிடுகிறது.
எந்த மதத்தினரின் மத உணர்வுகளுக்கு எதிராகவும், மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்காத வகையில், சங்க உறுப்பினர்கள் அறிக்கை விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
எனவே, இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு ராஜ்யோத்சவா கொண்டாட அனுமதி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்