England Cricket: `சிஸ்டம் சரியில்லைங்க!' – இங்கிலாந்தின் வீழ்ச்சிக்கான உண்மையான காரணம் இதுதானா?!

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியிருக்கிறது. அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் முதல் 6 போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்திருக்கிறது பட்லரின் அணி. 50 ஓவர் உலகக் கோப்பை மட்டுமல்லாது டி20 உலகக் கோப்பையிலும் நடப்பு சாம்பியனாய் இருக்கும் ஒரு அணியிடம் யாருமே எதிர்பாராத செயல்பாடு இது.

Jos Buttler

இங்கிலாந்தின் இந்தச் சொதப்பல் ஆட்டத்துக்குக் களத்தில் நடந்த பல சம்பவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அணித் தேர்வு, பட்லரின் கேப்டன்சி, டாஸில் எடுத்த முடிவுகள், பிளேயிங் லெவனில் செய்த மாற்றங்கள், பௌலிங் ஆப்ஷன்கள், ஆடுகளங்களைக் கணிக்காதது, பேட்டர்களின் அணுகுமுறை, பார்ட்னர்ஷிப் அமைக்கத் தவறியது… இவை போக 80% வீரர்களின் தனிப்பட்ட ஃபார்ம். இத்தனை காரணங்களையும் வைத்து 100 பக்க ஆய்வுக் கட்டுரை கூட எழுதலாம். இவையெல்லாம் நிச்சயம் இங்கிலாந்து தோற்பதற்கான காரணங்கள்தான். ஆனால் இவையெல்லாம் விளைவுகளே தவிர மூலக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், இந்தியாவில் தரையிறங்குவதற்கு முன்பே இங்கிலாந்து வீழ்ச்சிப் பாதையில் சென்றுவிட்டது.

Jos Buttler

பட்டியலிட்ட காரணங்களில் ‘பாஸ்பால்’ (Bazball) இல்லையே என்று அதிர்ச்சியடைய வேண்டாம். அது நிச்சயம் சரியான விஷயமல்ல. இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் பதவியேற்றது மே 2022ல். ஆனால் அதற்கு முன்பிருந்தே இங்கிலாந்து அணி ‘ஆல் அவுட் அட்டாக்’ அணுகுமுறையைக் கடைபிடித்துவந்தது. சொல்லப்போனால் 2019 உலகக் கோப்பையிலேயே அப்படித்தான் ஆடியது இங்கிலாந்து. அந்தத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 224 என்ற இலக்கை 32.1 ஓவர்களிலேயே சேஸ் செய்தது இங்கிலாந்து. இதுவரை அந்த அணி 5 முறை ஒருநாள் போட்டிகளில் 400+ ஸ்கோரை கடந்திருக்கிறது. அதில் 4 ஸ்கோர்கள் 2015 & 2019 உலகக் கோப்பைகளுக்கு இடையே எடுக்கப்பட்டவை.

ஷார்ட் ஃபார்மேட் போட்டிகளில் 2015 உலகக் கோப்பை தோல்வியிலிருந்தே இங்கிலாந்து அணி அந்த அதிரடி பாணியைத்தான் கடைபிடித்துக்கொண்டிருக்கிறது. அதனால் ஏற்படும் நல்லதோ, கெட்டதோ எதற்குமே பாஸ்பாலை காரணமாகச் சொல்வது சரியான விஷயம் இல்லை. அதை மோர்கனும் ஏற்றுக்கொள்ளமாட்டார். மெக்கல்லமும் ஏற்றுக்கொள்ளமாட்டார். பாஸ்பால் முழுக்க முழுக்க இங்கிலாந்தின் டெஸ்ட் அணுகுமுறைதான். வைட் பால் கிரிக்கெட்டில் அவர்கள் அதை ஏற்கெனவே பல ஆண்டுகளாக செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம்.

Joe Root

அக்டோபர் 23, 2023 – பெங்களூர்

இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஜோ ரூட் பேசிய விஷயங்கள் இங்கிலாந்து எங்கு பின்தங்கியது என்பதை தெளிவாக உணர்த்தும்.

2023 உலகக் கோப்பைக்கு இங்கிலாந்து அணி சரியாகத் தயாராகவில்லை என்று குறிப்பிட்டார் ஜோ ரூட். இந்த உலகக் கோப்பை அணி இணைந்து போதுமான அளவுக்கான ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை என்றும் கூறினார் அவர். அவர் மட்டுமல்ல அந்த அணியின் வைட் பால் பயிற்சியாளர் மேத்யூ மாட்டும் இதையேதான் குறிப்பிட்டிருந்தார். அவர்கள் சொல்வது ஒரு வகையில் முக்கியமான விஷயம்தான்.

2019 உலகக் கோப்பை வெற்றி, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுக்கு மாபெரும் நம்பிக்கையைக் கொடுத்துவிட்டது. பிசிசிஐ-க்கு இணையாக நிற்க முடியும் என்ற (மூட) நம்பிக்கையை அது ஏற்படுத்தியிருக்கவேண்டும். பொருளாதார ரீதியாக தங்கள் கிரிக்கெட்டை வெற்றியடையச் செய்வதிலும், அதற்கு முக்கியமான ரசிகர் பட்டாளத்தை உள்ளே அழைத்துவருவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இதில் வேண்டுமானால் பாஸ்பால் புரமோஷனைச் சேர்த்துக்கொள்ளலாம். போக, `தி 100′ தொடரை நிறுவுவதில் ECB பெரும் உழைப்பைக் கொட்டியது. டொமஸ்டிக் சீசன் கெடுவதைப் பற்றியெல்லாம் கூட கவலைப் படாமல் அந்தத் தொடரை நடத்தினார்கள். இங்கிலாந்தின் லிஸ்ட் ஏ கவுன்ட்டி தொடர் சமயத்தில் `தி 100′ நடந்ததால், பல வீரர்கள் கவுன்ட்டி தொடரில் பங்கேற்கவில்லை.

England

இப்படி எண்ணிலடங்கா டெஸ்ட் போட்டிகள், இரண்டு டி20 உலகக் கோப்பைகள், இரண்டு 100 தொடர்களுக்கு மத்தியில் இங்கிலாந்து அணியால் எத்தனை ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றிருக்க முடியும்?! அதிலும் ரொட்டேஷன் வேறு. 2019 & 2023 உலகக் கோப்பைகளுக்கு நடுவே வெறும் 42 ஒருநாள் போட்டிகளில்தான் விளையாடியிருக்கிறது இங்கிலாந்து. அதில் 44 வீரர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இப்படிப் போதுமான அளவு ஒருநாள் போட்டிகளில் ஆடாமல்தான் இந்தத் தொடருக்குள் நுழைந்திருக்கிறார்கள் இங்கிலாந்து வீரர்கள்.

இங்கிலாந்து அணியின் வீரர்கள் தேர்வின்போது தேர்வாளர்கள் மிகவும் தடுமாறினார்கள் என்று கூறியிருந்தார் மாட். போதுமான அளவுக்கு வீரர்களின் லிஸ்ட் ஏ ஸ்டேட் இல்லாததால், வீரர்கள் ஒப்பீடு செய்யவோ, அவர்களின் திறனை அளவிடவோ முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார் அவர். ஹேரி ப்ரூக் வெறும் 15 டொமஸ்டிக் 50 ஓவர் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். அதில் அவரது சராசரி 30 கூட இல்லை. அவர் இப்போது இங்கிலாந்துக்காக 10 போட்டிகளில் ஆடிவிட்டார். 2 டொமஸ்டிக் 50 ஓவர் போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கும் கஸ் அட்கின்சன் இங்கிலாந்துக்காக 4 போட்டிகளில் விளையாடிவிட்டார். இதுதான் இங்கிலாந்து கிரிக்கெட்டில் வீரர் தேர்வின் நிலை. இந்திய கிரிக்கெட் சங்கத்தை எப்படி ‘ஐபிஎல் பெர்ஃபாமன்ஸ் வைத்து அணியைத் தேர்வு செய்கிறார்கள்’ என்று நாம் விமர்சிக்கிறோமோ அப்படித்தான் செய்திருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம்.

இப்போது புரிகிறதா, இவர்கள் டெஸ்ட் போட்டியைப் போல் ஒருநாள் ஃபார்மேட்டை அணுகியதில் பிரச்னை இல்லை. டி20 போல் அணுகியதுதான் சிக்கலாக அமைந்துவிட்டது. சொல்லப்போனால் கடந்த ஆண்டு கவுன்ட்டி போட்டிகளின் எண்ணிக்கைகளை குறைப்பது பற்றிய அறிக்கை வெளியிட்டு பல தரப்பில் இருந்தும் விமர்சனங்களை வாங்கிக் கொட்டிக்கொண்டது ECB. இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் உள்பட!

ஆனால் இன்னொரு முக்கியமான கேள்வியையும் முன்வைக்கலாம். 2019 உலகக் கோப்பையில் ஆடிய பெரும்பாலான வீரர்கள் இந்த உலகக் கோப்பையில் இருக்கிறார்கள். அப்படியிருக்கையில், களத்தில் செயல்பாடு ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது? என்னதான் சமீபமாக ஒன்றாக விளையாடவில்லை என்றாலும், பழைய அனுபவம் கைகொடுக்கவேண்டும்தானே? இங்குதான் வீரர்களின், அணியின் மனநிலை குறித்து யோசிக்கவேண்டியிருக்கிறது.

Bairstow Wicket

இப்போது ரூட், மாட் மேலே சொன்ன விஷயங்களை மறுபடியும் யோசித்துப் பாருங்கள். ஒரு உலகக் கோப்பை தொடருக்கு நடுவே, அவர்கள் சிஸ்டம் ஃபெயிலியர் என்பதைப் பேசியிருக்கிறார்கள். எந்த நாட்டு வீரராக, பயிற்சியாளராக இருந்தாலும் இவ்வளவு பெரிய ஒரு தொடருக்கு நடுவே இப்படியான பிரச்சனையை பத்திரிகையில் பேசியிருக்கமாட்டார்கள். ஆனால் இவர்கள் பேசியிருப்பது நிர்வாகத்துக்கும், அணித் தரப்புக்கும் இடையே இருக்கும் இடைவெளியை, அது ஏற்படுத்தியிருக்கும் விளைவுகளை உணர முடிகிறது. அணியின் டிரஸ்ஸிங் ரூமில் ஆரம்பத்திலிருந்தே ஒரு நல்ல சூழல் நிலவவில்லை என்பது போல் தெரிகிறது. அதனால்தான் அந்த அணியால் ஒரு சரிவில் இருந்து மீண்டு வர முடியவில்லை. அத்தனை அனுபவ வீரர்கள் இருந்தும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை சூசகமாகக் கையாளவும் முடியவில்லை.

ஒரு பயிற்சியாளர், ஒரு முன்னாள் கேப்டன் ஆகியோர் கிடைத்த வாய்ப்பில் இப்படிப் போட்டு உடைக்கிறார்கள் என்றால், அது ஒரு சில வாரங்களில் எழுந்த பிரச்னையின் காரணமாக இருக்க வாய்ப்பில்லை.

கடந்த சில மாதங்களாகவே ECBயின் மத்திய ஒப்பந்த பேச்சுவார்த்தை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஓர் ஆண்டு ஒப்பந்தமாக இல்லாமல், கிளப் கால்பந்து போல் பல ஆண்டுகளுக்கான ஒப்பந்த முறையை அறிமுகம் செய்தது இங்கிலாந்து & வேல்ஸ் கிரிக்கெட் போர்டு. ஒருசில வீரர்கள் இதை ஏற்றுக்கொண்டாலும் பல வீரர்கள் அதில் அதிருப்தி தெரிவித்திருந்தனர். ஸ்டோக்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தத்துக்கு பதிலாக ஓர் ஆண்டு ஒப்பந்தமே கையெழுத்திட்டார். இந்தப் பேச்சுவார்த்தையால் பல வீரர்கள் அதிருப்தியில் இருப்பதாக தி டெலிகிராஃப் பத்திரிகை சமீபத்தில் குறிப்பிட்டிருந்தது. ஜேசன் ராய் ஒட்டுமொத்தமாக ஒப்பந்தம் கையெழுத்திட மறுத்தது, ஸ்டோக்ஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது போன்ற சம்பவங்கள் இதற்கு மத்தியில்தான் நடந்திருக்கின்றன.

Nasser Hussain

இதனிடையே இங்கிலாந்தின் தோல்விக்கு இதெல்லாம் காரணமே இல்லை என்கிற ரீதியில் நாசீர் ஹுசைன் கருத்து தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து வீரர்கள் சிஸ்டம் சரியில்லை என்று தெரிவித்த கருத்துக்கு எதிராக ஒரு வாதத்தை முன்வைத்திருக்கிறார்.

“நீங்கள் வென்று கொண்டிருக்கும் வரைக்கும் கிரிக்கெட் போர்டின் அணுகுமுறையும் சிஸ்டமும் சரியாக இருந்தது. அதுவே நீங்கள் தோற்கையில் சிஸ்டம் சரியில்லை என்பீர்களா? இதே சிஸ்டத்தில்தான் நீங்கள் இரண்டு உலகக்கோப்பைகளை வென்றிருக்கிறீர்கள். விராட் கோலியும் க்ளாஸனும் எத்தனை உள்ளூர்ப் போட்டிகளில் ஆடினார்கள்? இல்லை அவர்கள் எத்தனை ஓடிஐ போட்டிகளில்தான் சமீபமாக ஆடினார்கள்? எல்லாருமே குறைவான ஓடிஐக்களில்தான் ஆடினார்கள். ஆக, இங்கிலாந்து வீரர்கள் அதிக ஓடிஐ போட்டிகளில் ஆடவில்லை என கூறும் காரணமெல்லாம் சப்பைக்கட்டுதான்!” என்று அவர் இங்கிலாந்து அணியைக் கடுமையாகவே சாடியிருக்கிறார்.

இது அவரின் ஆதங்கத்தின் வெளிப்பாடு என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் தேவையான அளவு ஓடிஐ போட்டிகளில் விளையாடாதது மட்டுமே இங்கே காரணமில்லை. மேலே குறிப்பிட்டப்படி அதைச் சுற்றி அரங்கேறும் பல்வேறு விஷயங்களும் இதற்கான காரணங்களே!

2017ம் ஆண்டு பிரிஸ்டல் நைட் கிளப் சண்டை விஷயத்தில் ECB தன்னை நடத்திய விதம் குறித்து ஸ்டோக்ஸ் இன்னும் வருத்தம் கொண்டிருப்பதாகவும் அந்த டெலிகிராஃப் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது. தான் 2021ம் ஆண்டு மனநலன் காரணமாக ஓய்வில் இருந்ததற்கு அதுவும் ஒரு காரணம் என்று பின்பு குறிப்பிட்டிருந்தார் ஸ்டோக்ஸ்.

இவற்றுக்கு நடுவே பல்வேறு இனவெறி சர்ச்சை பிரச்னைகள், சில சமூக வலைதள பதிவுகளினால் எழுந்த பஞ்சாயத்துகள் என இந்த 4 ஆண்டுகளில் பலவிதமான சங்கடங்கக்ச் சந்தித்துவிட்டது இங்கிலாந்து கிரிக்கெட்.

England

இவற்றில் இருந்தெல்லாம் தெளிவாகப் புரியும் ஒரு விஷயம் – வீரர்களுக்கும் கிரிக்கெட் போர்டுக்கும் இடையே நல்ல உறவு இல்லை. டிரஸ்ஸிங் ரூமில் ஒரு நல்ல சூழ்நிலை நிலவுவதில்லை. போர்டும் வீரர்களும் வெளிப்படையாகவே தங்கள் பொருளாதார நிலைப்பாட்டைப் பிரதானப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது உங்களுக்கு நினைவுக்கு வருவது யார்? வெஸ்ட் இண்டீஸ்தானே?! இங்கிலாந்து இப்போது சரியான இடத்தில்தானே இருக்கிறது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.