தற்போதைய டிரெண்டிங் டாக் `லியோ’ திரைப்படத்தின் ஃபிளாஷ்பேக்தான்.
நடிகர் விஜய் நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. அத்திரைப்படத்தில் லியோ தாஸ் கதாபாத்திரத்தின் ஃபிளாஷ்பேக் இடம்பெற்றிருந்தது. அந்த ஃபிளாஷ்பேக்கை மன்சூர் அலிகான் கௌதம் மேனனிடம் கூறுவதாகத் திரைக்கதை அமைந்திருக்கும்.
‘லியோ’ திரைப்படம் வெளியான ஓரிரு நாள்களில் அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒரு பேட்டியில், “லியோ தாஸ் குறித்தான ஃபிளாஷ்பேக் காட்சிகள் பொய்யாகக்கூட இருக்கலாம்” எனக் கூறியிருந்தார். இந்த ஒற்றை வரியை ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் அதிகளவில் பகிர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜும் ஒரு பேட்டியில், “அந்த ஃபிளாஷ்பேக் மன்சூர் அலி கானின் இருதயராஜ் கதாபாத்திரத்தின் பார்வையில் இருக்கும். பார்த்திபன் கதாபாத்திரம் தானாகவே முன் வந்து அந்த ஃபிளாஷ்பேக்கைச் சொல்லவில்லை. அந்த ஃபிளாஷ்பேக் பொய்யாகக்கூட இருக்கலாம்” எனக் கூறினார்.
இதையடுத்து ரசிகர்களும் சமூக வலைதளங்களில், “அதனால்தான் பார்த்திபன் உடம்பில் துப்பாக்கிக் குண்டு படிந்த காயங்கள் எதுவும் காணப்படவில்லையா?” என்பது போன்ற பல டீகோட் பதிவுகளைப் பதிவிடத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து படக்குழுவும் மன்சூர் அலிகானின் ‘இருதயராஜ்’ பாத்திரம், “இது என் பார்வை மட்டுமே” என்று சொல்லும் டெலீட் செய்யப்பட்ட காட்சி ஒன்றை ஸ்பெஷலாகப் பகிர்ந்திருக்கின்றனர்.
சரி, லியோவின் ஃபிளாஷ்பேக் ஃபேக்கா இல்லையா என்ற விவாதத்தை எல்லாம் விட்டுவிடுவோம். தமிழ் சினிமாவில் ஃபேக் ஃபிளாஷ்பேக்குகள் இடம்பெற்ற திரைப்படங்கள் குறித்து ஆராய்ந்ததில் அத்தகைய டெம்ப்ளேட்டில் படங்கள் குறைவுதான் என்பது தெரியவந்தது. அந்தத் தேடலில் கிடைத்த சில படங்கள் இங்கே…
வாலி
தற்போது நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா இயக்குநராகத் தமிழ் சினிமாவில் தடம் பதித்த திரைப்படம் ‘வாலி’. அத்திரைப்படத்தில் அஜித் குமார், சிம்ரன் நாயகன் – நாயகியாக நடித்திருப்பார்கள். அதில் சிம்ரன் ஏற்கெனவே பிரக்-அப் ஆன ஒருவரைதான் காதலிக்க வேண்டுமென நினைப்பார். அதற்காக அஜித்தும் தான் ஏற்கெனவே ஒரு பெண்ணைக் காதலித்ததாக ஒரு பொய்யான ஃபிளாஷ்பேக்கைக் கூறுவார்.
அந்த பொய்யான கற்பனை ஃபிளாஷ்பேக்கில் காதலி கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்திருப்பார். இது ஃபேக் ஃபிளாஷ்பேக் என்றாலும் அஜித் – ஜோதிகா தோன்றும் கற்பனைக் காட்சிகள் நிஜமாகவே படத்தில் இடம்பெற்றிருந்தன.
மன்மதன்
ஏ.ஜே.முருகன் இயக்கத்தில் சிம்பு, ஜோதிகா ஆகியோரின் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு ‘மன்மதன்’ திரைப்படம் வெளியானது. அத்திரைப்படத்தில் ‘மன்மதன்’ என்கிற பெயரில் கொலைகளை ஒருவர் செய்வதாக கதைக்களம் அமைந்திருக்கும். அதனை சிம்புதான் செய்தார் எனத் தெரியவந்து போலீஸார் விசாரிக்கையில், “அது என்னைப் போல இருக்கிற என் சகோதரன்” எனத் தனது சகோதரர் மதன் ராஜ் குறித்தான ஃபிளாஷ்பேக்கைக் கூறுவார்.
அந்தக் கதையில் நிறையப் பொய்களைக் கலந்து ஒரு ஃபிளாஷ்பேக்காக அதைக் கூறுவார். பின்பு, திரைப்படத்தின் இறுதியில்தான் உண்மைத் தெரிய வரும். ஃபேக் ஃபிளாஷ்பேக் என்ற வகையில் இந்தப் படமும் கவனிக்கத்தக்கது.
பீட்சா
கார்த்தி சுப்பராஜ் இயக்குநராகக் களம் கண்ட திரைப்படம் ‘பீட்சா’. இத்திரைப்படம் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியானது. அதில் விஜய் சேதுபதி பல அமானுஷ்யங்கள் நிறைந்த வீட்டிற்குள் சென்றுவிட்டதாக ஒரு திகில் கதையைத் தனது முதலாளியிடம் கூறுவார்.
அதன் பின்பு வைரத்தை எடுத்துச் செல்வதற்காகத்தான் அது போன்ற திகில் கதையை அவர் பொய்யாகக் கூறியதாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அந்த வகையில் இதுவும் ஃபேக் ஃபிளாஷ்பேக் இடம்பெற்ற திரைப்படம்தான்.
இசை
ஃபேக் ஃபிளாஷ்பேக்கை விடுங்கள். ஒரு படமே ஃபேக் என்றால்..? அதைத்தான் 2015-ம் ஆண்டு வெளியான தன் ‘இசை’ படம் மூலம் நிகழ்த்திக் காட்டினார் படத்தின் இயக்குநரும் நாயகனுமான எஸ்.ஜே.சூர்யா.
இரண்டு தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு இடையே நடக்கும் ஈகோ மோதலை ஒரு மியூசிக்கல் த்ரில்லராக கொடுத்திருப்பார் எஸ்.ஜே.சூர்யா. ஆங்காங்கே குழப்பங்கள், லாஜிக் பிழைகள் என்பதாக நகரும் கதை, க்ளைமாக்ஸை நெருங்கும் வேளையில் அதிரடி ட்விஸ்ட்டாக மொத்தப் படமும் கனவு என்பதாக ‘அன்பே ஆருயிரே’ படத்தின் எஸ்.ஜே.சூர்யா கண் விழிப்பார். க்ளைமாக்ஸை மட்டும் யோசிக்க வேண்டும் என்பதாகப் படத்தை முடித்திருப்பார்கள். இந்தப் புதுமையான ஐடியா அப்போது பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஃபேக் ஃபிளாஷ்பேக் பற்றி யோசிக்கும்போது நிச்சயம் இந்தப் படமும் நம் மனதில் வந்து நிற்கும்.
மார்க் ஆண்டனி
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அதில் மார்க் கதாபாத்திரத்தின் தாயாரை, அப்பா ஆண்டனி கதாபாத்திரமே கொலை செய்ததாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
சிறிய இடைவெளியிலேயே அக்கொலையை உண்மையாகச் செய்தது ஜாக்கி பாண்டியன்தான் என்ற உண்மை தெரிந்துவிடும். இதுவும் ஒரு வகையில் ஃபேக் ஃபிளாஷ்பேக்தான்!
ரஷமோன் எஃபெக்ட்டில் வந்த ஃபிளாஷ்பேக்குகள்
அகிரா குரோசாவாவின் ‘ரஷமோன்’ திரைப்படத்தின் திரைக்கதை அம்சத்தை மையப்படுத்தி அடுத்தடுத்து வெளிவந்த திரைப்படங்களை ‘இது ரஷமோன் எஃபெக்ட்டை மையப்படுத்தியது’ எனக் கூறுவார்கள். அந்த வரிசையில் ‘விருமாண்டி’, ‘துருவங்கள் பதினாறு’ ஆகிய திரைப்படங்கள் அடங்கும். ‘விருமாண்டி’ திரைப்படத்தில் கொத்தாளத் தேவர் தனது பார்வையில் ஒரு ஃபிளாஷ்பேக்கைக் கூறுவார். அதற்கடுத்து ‘விருமாண்டி’ தனது பார்வையிலுள்ள ஃபிளாஷ்பேக்கைக் கூறும்போது கொத்தாளத் தேவர் கூறியது மெய் அல்ல என்பது தெரிந்துவிடும்.
‘துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தில் கௌதம் கதாபாத்திரம் தனது பார்வையில் பொய்யான ஃபிளாஷ்பேக்கைக் கூறுவார். இறுதியாக அது பொய்யானது எனக் காட்டிவிடுவார்கள். அதுவும் ஓர் உதாரணம்.
இவையெல்லாம் சில உதாரணங்கள்தான்! இது போகப் பல திரைப்படங்களில் கதாபாத்திரங்களின் நெகட்டிவ் டிவிஸ்ட்களுக்காகவும் காமெடிக்காகவும் பல ஃபேக் ஃபிளாஷ்பேக்குகளைச் சேர்த்திருக்கிறார்கள். இவற்றைத் தவிர வேறு ஏதேனும் ஃபேக் ஃபிளாஷ்பேக்குகள் இடம்பெற்ற படங்கள் உங்களுக்குத் தெரிந்திருந்தால் கமென்ட்டில் பதிவிடுங்கள்.