ரபா, இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடக்கும் நிலையில், ரபா எல்லையை எகிப்து அரசு நேற்று திறந்தவுடன், காசாவில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேறினர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் ஒரு மாதமாக போர் நடக்கிறது.
இதில், பாலஸ்தீனத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 8,500 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலில், 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் வான்வழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், தற்போது படிப்படியாக, தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தி வருகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடக்கும் நிலையில், காசாவின் தெற்கு எல்லையில் உள்ள ரபா எல்லையை, அதன் அண்டை நாடான எகிப்து அரசு, நேற்று முதன்முறையாக திறந்தது.
இந்த எல்லை வழியாக, இரட்டை குடியுரிமை மற்றும் வெளிநாட்டு பாஸ்போர்ட் வைத்துள்ள, 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் காசாவில் இருந்து வெளியேறினர். இவர்களில், ஐ.நா., சபை அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அடங்குவர்.
எனினும், காசா பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள், ரபா எல்லையை கடக்கவில்லை. மேலும், 200க்கும் மேற்பட்ட லாரிகளில், காசாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்களை, எகிப்து அரசு அனுப்பி வைத்தது.
இதற்கிடையே, தீவிர நோய்வாய்ப்பட்ட அல்லது படுகாயம்அடைந்த, 81 பாலஸ்தீனியர்கள் அடங்கிய முதல் குழு, மருத்துவ சிகிச்சைக்காக எகிப்துக்கு வர அனுமதிக்கப்படுவதாக, அந்நாட்டு அரசு அறிவித்தது.
காசா பகுதியில், அகதிகள் முகாம்கள் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில், தொடர்ந்து இரண்டாவது நாளாக, இஸ்ரேல் படைகள் நேற்றும் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்