பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பாரட்டுக்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படம் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், பா.ரஞ்சித், ஜி.வி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். இவ்விழாவில் பேசிய நடிகர் விக்ரம், தங்கலான் படத்தின் மேக்கிங் குறித்தும் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்தும் கலகலப்பாகப் பேசியிருந்தார்.
நம்ம இந்தியாவில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு, கெட்ட விஷயங்களும் இருக்கு. அதைச் சரியாக காட்டிருக்கோம். ஆங்கிலேயர் காலகட்டத்தில் சமுதாயம் எப்படி இருந்தது என்பதை ரொம்ப எளிமையாகக் காட்டி இருக்கார் ரஞ்சித். நாங்கள் செட் போட்டு எல்லாம் எடுக்கல, உண்மையா ‘கேஜிஎஃப்’ -ல் இருந்தோம். முள்ளு, பாம்பு எல்லாமே இருக்கும். செட்டில் செருப்பு இல்லாமல் பயந்து நடப்போம். ரஞ்சித் திடீரென, ‘தேள் கொண்டு வாடா’ என்று கேட்டால் உடனே தேள், பாம்பு எல்லாம் வரும்.
`அந்நியன்’, `ஐ’ படத்தில் எல்லாம் டப்பிங்கில் கூடுதலாக நிறைய முயற்சிகள் செய்தேன். ஆனால், ‘தங்கலான்’ லைவ் சவுண்ட் என்று ரஞ்சித் சொல்லிட்டார். அது ரொம்பக் கஷ்டமாக இருந்தது. அதேமாறி நிறைய சிங்கிள் ஷாட் படத்தில் இருக்கு. ஒவ்வொரு சீனும் 2 ஷாட் , 3 ஷாட்ல முடியும். காலையில வேலை ஆரம்பிச்சா நடந்துகிட்டே இருக்கும். ஓய்வெடுக்க வாய்ப்பே இல்லை. காலையில வேலை ஸ்டார்ட்டானா லஞ்ச் அப்போ தான் ப்ரேக் . அதுவும் பல நாள் 3 மணி 4 மணிக்குத்தான் லஞ்ச். சில நாள் அதுவும் கிடையாது. இந்தப் படத்தில் பல மாதம் கோமணம் கட்டி நடித்து, அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டேன். திடீரென வீட்டுக்கு விமானத்தில் போகும் போது அந்நியமாக இருந்தது.
ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பும் இரவு 11 மணி 12 மணி வரை போகும், எப்படா முடியும் என இருக்கும். அடுத்த நாள் காலையில 6 மணிக்குப் புத்துணர்ச்சி வரும். அதுவும் இன்பமான அனுபவமாக இருந்தது. ஜி.வி. பிரகாஷ் நடிக்கப் போகும்போது ‘நடிக்க வேணாம் ஜி.வி’ என்று சொன்னேன். நல்ல இசையமைப்பாளர் நடிக்க போய்விட்டால் நம்ம படத்துக்கு நல்ல இசை கிடைக்காதோ என்று பயம் இருந்தது. ஆனால், ஜி.வி ஹீரோவான பிறகு இன்னும் செம்மையா நிறைய படத்தில் இசையமைத்து பட்டையக் கிளப்புகிறார். இப்படத்தில் எங்களுடன் இணைந்து 200க்கும் மேற்பட்ட நாடகக் கலைஞர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்தப் படம் இந்திய சினிமாவிற்கு ஒரு ‘Eye opener’ ஆக இருக்கும்” என்று பெருமிதத்துடன் பேசினார்.