Vijay: “விஜய் சாருக்கு நவம்பர்-1 ரொம்ப ஸ்பெஷலான நாள்; ஏன்னா…!” – இயக்குநர் பேரரசு

தீபாவளி பட்டாசு என்றால் நினைவுக்கு வருவது சிவகாசி. ஆனால், தீபாவளி நெருங்கும்போதெல்லாம் விஜய் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது ஹிட்டாய் வெடித்த ‘சிவகாசி’ படம்.

விஜய் ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்த ‘சிவகாசி’ நவம்பர்-1 இதேநாளில்தான் வெளியானது. 18 வருடங்கள் ஆகிவிட்டாலும் விஜய்யாலும் அவரது ரசிகர்களாலும் மறக்கமுடியாத படம். இயக்குநர் பேரரசுவிடம் ’சிவகாசி’ நினைவுகள் குறித்து பேசினேன்.

“சிவகாசி என் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான படம். 18 வருடங்கள் போனதே தெரியல. ஏதோ நாலஞ்சு வருசம் ஆனமாதிரிதான் இருக்கு. விஜய் சார் என்னை நம்பிக்கொடுத்த இரண்டாவது படம். ‘திருப்பாச்சி’ 2005-ல வெளியானது. அதே வருடம், வெளியான படம்தான் ‘சிவகாசி’. திருப்பாச்சி முதல் படம்ங்கிறதால, பொதுவா பண்ணின கதை. அதுல விஜய் சார் நடிச்சாரு. ஆனா, ’சிவகாசி’ விஜய் சார்க்காகவே பண்ணின ஸ்பெஷல் பேக்கேஜ். ரசிகர்களும் ரொம்ப எதிர்பார்ப்புல இருக்காங்கன்னு ரொம்ப மெனக்கெட்டு பண்ணின படம். பட்டாசு வெடிச்சு கொண்டாடுற அளவுக்கு சிவகாசி மாஸ் ஹிட். படம் வெளியான ஒருவாரம் கழிச்சு விஜய் சார், போன் பண்ணி என்னை வீட்டுக்குக் கூப்ட்டாரு.

விஜய்

படத்தைப் பற்றி பேசத்தான் கூப்பிடுறாருன்னு நினைச்சு போனேன். விஜய் சாரே எனக்காக, முறுவலான தோசை ஊற்றிக் கொடுத்தாரு. அப்படியொரு மெல்லிசான தோசையை எங்குமே பார்க்கமுடியாது. நைட்டு, அவர்கூட சாப்ட்டு முடிச்சதும் என்னை வெளியில விட வந்தாரு. திடீர்ன்னு கையில கார் சாவியைக் கொடுத்தாரு. நான், ஒண்ணும் புரியாம அவர் காண்பிச்ச திசையை நோக்கி திரும்பிப் பார்த்தா புது மாருதி நிற்குது.

எனக்கு என்ன சொல்றதுன்னே புரியல. அதுமட்டுமில்லாம, கார்ல என்னை உட்கார வெச்சு ஓட்டினாரு. வரும்போது நான் ஆட்டோவுல வந்தேன். அப்போ, எனக்கு காரெல்லாம் ஓட்டத் தெரியாது. அதுக்கப்புறம்தான் கார் ஓட்டக் கத்துக்கிட்டேன். இப்படியொரு கிஃப்ட் கொடுப்பாருன்னு எதிர்பார்க்கவே இல்லை.

அதேமாதிரி, ’திருப்பாச்சி’ ரிலீஸ் ஆனப்போ, 1,200 ரூபாய் வாடகையில பத்துக்கு பத்து ரூம்ல தங்கியிருந்தேன். காமன் பாத்ரூம்தான். தனியா, வீடு பார்க்க அட்வான்ஸ் எல்லாம் கொடுக்கவேண்டியிருந்தது. என்ன பன்றதுன்னு புரியாம தவிச்சிக்கிட்டிருக்கும்போது, விஜய் சாரு , திருப்பாச்சி ஹிட்டுக்காக 1 லட்ச ரூபாய் கொடுத்தாரு. அப்படியே, சந்தோஷத்துல உரைஞ்சுபோயிட்டேன். தங்கமான மனுஷன். எல்லோரும் விஜய் சார், அஜித் சார் ரெண்டு பேருக்கும் பகைன்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க. ஆனா, அஜித் சாரோட ’திருப்பதி’ பட வாய்ப்பு கிடைச்சதும் விஜய் சார்கிட்ட சொன்னப்போ, வாழ்த்துகள் சொல்லி ரொம்ப என்கரேஜ் பண்ணினதோட ‘திருப்பதி’ பட பூஜைலயும் வந்து கலந்துக்கிட்டார். அவர் அப்படி என்கரேஜ் பண்ணதாலதான், முழு மனசோட என்னால தயாரிப்பு நிறுவனத்துக்கு ஓகே சொல்ல முடிஞ்சது.

இயக்குநர் பேரரசு

விஜய் சாரும் அஜித் சாரும் நல்ல நட்புலதான் இருக்காங்க. அஜித் சார் நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவர், வீட்டு ஃபங்க்‌ஷனுக்கு என்னை இன்வைட் பண்ணிருந்தார். விஜய் சாரும் இப்பவும் என்கூட தொடர்புலதான் இருக்காரு. அவரை மீட் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். ’சர்கார்’ டைம்ல ஒரு அரசியல் கதை சொன்னேன். நான் தான் அரசியலுக்கு வரலையே வேணாம்னு சொல்லிட்டாரு. நாமும் கதை சொல்றேன்னு அவரை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு இருக்கேன்.

இன்னைக்கு ட்ரெண்ட் எல்லாம் மாறியிருக்கு. தயாரிப்பு செலவுகள் எல்லாம் ஏறிடுச்சு. 400 கோடி ரூபாய், 500 கோடி ரூபாய்ன்னு பட்ஜெட் போடுறாங்க. அதுக்கேத்த மாதிரி என்னாலயும் தரமான கதை பண்ண முடியும்.

ஜனவரியில், என்னோட புது படத்தோட அறிவிப்பு வெளியாகும். ஸ்கிரிப்ட் ஒர்க்கெல்லாம் முடிச்சுட்டேன்” என்று எனர்ஜியுடன் பேசுபவரிடம், ”லியோ பார்த்தீர்களா?” என்றோம்.

”லியோ பார்த்தேன். ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருந்தது. விஜய் சார் ஆக்டிங் பயங்கரமா இருந்துச்சு. அற்புதமா நடிச்சிருந்தார். ஆனா, திரைக்கதையில மட்டும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். மத்தபடி படம் சூப்பர். இதுல, முக்கியமான விஷயம் என்னன்னா, நவம்பர்- 1 விஜய் சார்க்கு ரொம்ப ராசியான நாள்னு நினைக்கிறேன். ஏன்னா, இதேநாளில் சிவகாசி ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சு. இன்னைகுத்தான், ’லியோ’ வெற்றி விழாவும் கொண்டாடுறாங்க. அதனால, எனக்கு சந்தோஷம்தான்” என்பவரிடம் “பாஜகவுல இருக்கீங்க.. தேர்தலில் எப்போ போட்டி?” என்றோம்.

திருப்பாச்சி பட பூஜையில் அஜித்துடன் விஜய்

”நான் இயக்குனராகுறதுக்கு முன்னாடி பத்து, பதினைந்து வருஷம் உதவி இயக்குநரா இருந்தேன். அந்த அனுபவம்தான், சூப்பர் ஹிட் படத்தைக் கொடுக்க வெச்சது. அப்படித்தான், இப்போ அரசியலும், அனுபவம் கிடைச்சதும் எல்லாம் தானா நடக்கும்” என்கிறார் நம்பிக்கையுடன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.