இறுக்கமான முகத்துடன் அமைச்சர் எ.வ.வேலு; `தீபாவளி சர்ப்ரைஸ்' எதிர்பார்த்து, அப்செட்டான விசுவாசிகள்!

மிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள், அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில், ஐந்து நாள்களாக வருமான வரித்துறையினர் சல்லடைபோட்டுச் சோதனை நடத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர். கடந்த 3-ம் தேதி தொடங்கிய இந்தச் சோதனை, 7-ம் தேதி இரவுதான் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, அன்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ‘‘வருமான வரித்துறையினர் மனஉளைச்சலை உருவாக்கிவிட்டனர். என்னைத் தொடர்புபடுத்தி விழுப்புரம், கோயம்புத்தூர், வந்தவாசி உட்பட திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பல பகுதிகளிலும் சோதனை நடத்தியிருக்கின்றனர். கண்ணீர் வரவழைக்கும் வகையில், கேள்விகளால் துளைத்துவிட்டார்கள். இந்த ரெய்டால் ஐந்து நாள்கள் எனது அரசுப்பணிகள் முடங்கியிருக்கின்றன. எல்லோருமே பயந்துபோயிருக்கின்றனர்’’ என 5 நாள்களாகப்பட்ட அவஸ்தையை குமுறல்களாகக் கொட்டித் தீர்த்தார்.

அமைச்சர் எ.வ.வேலு

ஐ.டி கொடுத்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாத அமைச்சர் எ.வ.வேலு, நேற்றைய தினம் ஓய்வில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 6 நாள்களுக்குப் பிறகு இன்று காலையில்தான் தனது சொந்த மாவட்டமான திருவண்ணாமலையைவிட்டு வெளியேறி, அருகேயுள்ள வேலூருக்கு வந்தார்.

வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில், பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டுவரும் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமானப் பணியைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதையடுத்து, செய்தியாளர்களையும் சந்தித்து பேட்டிக் கொடுத்தார். அப்போதும் அவரின் முகத்தில் வழக்கமான புன்னகையும், சுறுசுறுப்பான பேச்சும் காணப்படவில்லை. இறுக்கமான முகத்துடன் காணப்பட்ட அவர், விறுவிறுவென ஆய்வுப் பணியை முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டார்.

அமைச்சர் எ.வ.வேலு

இது பற்றிப் பேசுகிற வேலூர் உடன்பிறப்புகள், ‘‘எதிலும் வல்லவர் வேலு. அந்த வார்த்தையின் சுறுக்கம்தான் அவரின் பெயர் என்று தலைவர் ஸ்டாலின் அடிக்கடிச் சொல்வார். அப்பேர்ப்பட்ட அமைச்சரை இறுக்கமாகப் பார்க்கும்போது, கவலையாக இருக்கிறது. வேலூருக்கு வந்த அமைச்சர், நிர்வாகிகளுக்கு தீபாவளி சர்ப்ரைஸ் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தோம். ஆனால், எங்களுக்கும் எதுவும் கிடைக்கவில்லை’’ என்றனர் அப்செட்டாக. அதேபோல, பேட்டிக் கொடுப்பதற்கு முன்பே, ‘‘வருமான வரித்துறை ரெய்டு பற்றிய கேள்விகளைக் கட்டாயம் கேட்கவே கூடாது. அதற்கு ஓக்கே என்றால் மட்டுமே, பேட்டி’’ என்று அமைச்சர் தரப்பிலிருந்தும் உத்தரவாதம் பெறப்பட்டதால், பத்திரிகையாளர் சந்திப்பும் சாதாரணமாகவே நடந்து முடிந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.