உலகக்கோப்பை கிரிக்கெட்; பவுல்ட் அபார பந்துவீச்சு..! விக்கெட்டுகளை இழந்து திணறும் இலங்கை அணி

பெங்களூரு,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

இதில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான நிசங்கா ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே 2 ரன் எடுத்த நிலையில் சவுதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களம் இறங்கிய கேப்டன் குசல் மெண்டிஸ் மற்றும் சமரவிக்ரமாவை ஒரே ஓவரில் பவுல்ட் அவுட்டாக்கினார்.

அடுத்து களம் இறங்கிய அசலன்காவும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவரையும் பவுல்ட் காலி செய்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியில் வெளுத்து வாங்கிய குசல் பெரேரா 22 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில் பெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த மேத்யூஸ் மற்றும் டி சில்வா இருவரின் விக்கெட்டுகளையும் சான்ட்னர் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார்.

தற்போது வரை இலங்கை அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களுடன் தத்தளித்து வருகிறது. கருணாரத்ன மற்றும் தீக்ஷனா ஆகியோர் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் பவுல்ட் 3 விக்கெட்டுகளும் , சான்ட்னர் 2 விக்கெட்டுகளும், சவுதி மற்றும் பெர்குசன் தலா ஒரு விக்கெட்டும் எடுத்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.