அனைவருக்கும் பசுமை வணக்கம்!
‘ஊரான் ஊரான் தோட்டத்திலே… ஒருத்தன் போட்டது வெள்ளரிக்கா… காசுக்கு நாலாக விக்கச் சொல்லி, காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன்’ என்பதுபோல உள்ளது மத்திய அரசின் கொள்கைகள். ஆம், ‘‘கடந்த 9 ஆண்டுகளில் உணவு பதப்படுத்துதல் துறையில் ரூ.50,000 கோடி அந்நிய நேரடி முதலீடு செய்யப்பட்டுள்ளது’’ என்று பெருமிதமாகப் பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற ‘வேர்ல்ட் ஃபுட் இந்தியா’ நிகழ்ச்சியில்தான் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், உண்மை நிலை வேறு. வெளிநாட்டு நிறுவனங்களைத் தொழில் தொடங்க அழைக்கும், மத்திய அரசு, அவர்கள் விவசாயிகளுக்கு நியாயமான விலை கொடுக்கிறார்களா? என்பதைக் கவனிக்கத் தவறி வருகிறது. இதனால், வெளிநாட்டு நிறுவனங்கள் விவசாயிகளை நசுக்கி, விளைபொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்கிக் கொள்ளை லாபம் குவிக்கின்றன.
‘‘விவசாயிகள் எங்கள் சொல்படிதான் விதைக்க வேண்டும், அறுவடை செய்ய வேண்டும்’’ என்று பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் பெப்சி நிறுவனம் ஆடிய ஆட்டத்தை யாரும் மறந்திருக்க முடியாது.
அமெரிக்காவைச் சேர்ந்த பெப்சி நிறுவனத்தின் பிரபலமான சிப்ஸ்களில் ‘லேஸ்’ வகை மிகவும் பிரபலமானது. இந்த வகை சிப்ஸ்களைத் தயாரிக்க எஃப்.எல்-2027 என்ற வகை உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை உருளைக் கிழங்கைப் பயிரிடுவதற்கான காப்புரிமையைப் பெப்சி நிறுவனம் வைத்திருந்தது. இவர்களின் ஒப்பந்தம் இல்லாமல், இந்த உருளைக்கிழங்கை யாரும் பயிர் செய்யக் கூடாது என்று குண்டர்களை வைத்துக் கண்காணித்தது.
2019-ம் ஆண்டு, குஜராத்தில் சில விவசாயிகள், தங்கள் நிலத்தில் எஃப்.எல்-2027 என்ற உருளைக்கிழங்கைச் சாகுபடி செய்தார்கள். அவ்வளவுதான், அவர்கள் மீது 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு, வழக்கு தொடர்ந்து அச்சுறுத்தியது பெப்சி.
நாடு முழுக்க இந்தப் பிரச்னை பெரிய அலையை ஏற்படுத்தியது. அந்த ஆண்டு குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருந்தது. உருளைக்கிழங்கால் மீண்டும் பி.ஜே.பி கட்சி ஆட்சிக்கு வர முடியாமல் போகும் என்பதால், பெப்சியிடம் பேசி வழக்கை திரும்பப் பெற வைத்தார்கள்.
இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்; இன்றும் நெல், கோதுமை, கரும்புக்கு உரிய விலை இல்லை, பாலுக்குப் போதுமான விலை கிடைக்கவில்லை என்று நாடு முழுக்கப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை உள்ள அரசாக இருந்தால், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கடிவாளம் போட்டு, விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
– ஆசிரியர்