புதுச்சேரி: போனஸ் தொடர்பான என்எல்சி முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் திட்டமிட்டப்படி தீபாவளியன்று என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர்.
என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் தரக்கோரி ஜீவா ஒப்பந்த தொழிற்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. அதுதொடர்பாக போராட்டங்கள், பேச்சுவார்த்தை நடந்தும் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக அலுவலகத்தில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் என்எல்சி அதிகாரிகள், என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம், என்எல்சிக்கு நிலம் வீடு தந்து பாதிக்கப்பட்ட தொழிலாளர் சங்கம், நாம் தமிழர் தொழிலாளர் சங்க நிர்வாகிகள், சொசைட்டி அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொழிலாளர் உதவி ஆணையர் ரமேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதுகுறித்து ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சேகர் கூறுகையில், “சொசைட்டி, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் தரக்கோரி நான்கு கட்டப் போராட்டம் நடத்தியுள்ளோம். ஆனால், என்எல்சி மற்றும் சொசைட்டி தரப்பு 8.33 சதவீதம் மேல் போனஸ் தர மறுத்து விட்டனர். இதனால் போராட்டத்தை தவிர வேறு வழியில்லை என்ற முடிவு எடுத்துள்ளோம். கடந்த ஆறு மாதங்களில் ரூ. 1500 கோடி லாபத்தை ஈட்டியதாக என்எல்சி அறிவித்துள்ள நிலையில் லாப நஷ்ட வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்யவேண்டும் என வலியுறுத்தினோம்.
அடுத்தக் கூட்டத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் போனஸ் தொகை தரக்கோரியுள்ளோம். தற்போது போனஸ் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாமல் தோல்வியடைந்தது. அதனால் திட்டமிட்டப்படி தீபாவளியன்று தொழிலாளர்களுக்கு தீபாவளி நடத்த இயலாத சூழலை மத்திய, மாநில, என்எல்சி நிர்வாகத்துக்கு தெரிவிக்க போராட்டம் நடத்த உள்ளோம். என்எல்சி தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்பார்கள்” என்று தெரிவித்தார்.