கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தன் மீதான புகார்களை தானே எதிர்கொள்ளும் திறன் பெற்றவர் என்று அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியும், மம்தா பானர்ஜியின் சகோதரர் மகனுமான அபிஷேக் பானர்ஜி, பணம் பெற்றுக்கொண்டு அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் செய்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதையடுத்து, இன்று அமலாக்கத் துறை அலுவலகம் வந்த அபிஷேக் பானர்ஜி, தன் மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, வெளியே வந்த அபிஷேக் பானர்ஜி, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா, பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியதாகத் தொடரப்பட்டுள்ள விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அபிஷேக் பானர்ஜி, “மஹுவா மொய்த்ரா அரசியலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், தன் மீதான புகார்களை எதிர்கொள்ளும் திறன் அவருக்கு உள்ளது. எனவே, அதனை அவரே எதிர்கொள்வார். நான்கு ஆண்டுகளாக என்னையும் மத்திய அரசு பலிகடா ஆக்குகிறார்கள். அது அவர்களின் வழக்கமான நடைமுறை” என்று தெரிவித்தார்.
மஹுவா மொய்த்ரா விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், “இந்த சர்ச்சை யாரைச் சுற்றி வருகிறதோ, அவர்தான் இதற்கு எதிர்வினையாற்ற மிகவும் பொருத்தமானவர்” என்று கூறி அவரும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். மஹுவா மொய்த்ராவுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் மேல் மட்ட ஆதரவு இல்லாததாக சொல்லப்படும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக அபிஷேக் பானர்ஜியின் கருத்தும் இருப்பதாகக் கூறப்படுகிறது.