புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு மக்களவை நெறிமுறைக் குழுவின் விசாரணை அறிக்கை தயாராகிவிட்டதாக அக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்களவை நெறிமுறைக் குழு தலைவர் வினோத் குமாா் சோன்கா் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது “தர்ஷன் ஹிரானந்தானியின் பிரமாணப் பத்திரம், நிஷிகாந்த் துபேவின் புகார் மற்றும் மஹுவா மொய்த்ரா அளித்த வாக்குமூலம் என அனைத்து ஆதாரங்களையும் நெறிமுறைக் குழு ஆய்வு செய்து ஓர் அறிக்கையை தயாரித்துள்ளது. இதை ஆராய்ந்து, அதன் பிறகு அறிக்கையை மக்களவை சபாநாயகருக்கு நெறிமுறைக் குழு அனுப்பி வைக்கும். இதற்கு முன்பும் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றன. அப்போதும் இவர்களின் புகார்களையும், வாக்குமூலங்களையும் ஆய்வு செய்தோம்’’ என்றார். மஹுவா மொய்த்ராவின் மக்களவை உறுப்பினர் பதவியை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “நெறிமுறைக் குழு இது குறித்து முடிவெடுக்கும். அனைத்து உண்மைகளையும் ஆராய்ந்து, அதன் அறிக்கையை சபாநாயகருக்கு அனுப்பும்” என்று கூறினார்.
பின்புலம் என்ன? – திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா மக்களவையில் இதுவரை கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை. இந்தக் கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை மஹுவா மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் இதுகுறித்து புகார் அளித்தார். அவரது பரிந்துரையின் பேரில் இந்த விவகாரத்தை மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இது தொடா்பாக விசாரணை நடத்த பாஜக எம்.பி. வினோத் குமாா் சோன்கர் தலைமையிலான மக்களவை நெறிமுறை குழுவுக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக நிஷிகாந்த் துபே, வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோர் மக்களவை நெறிமுறைகள் குழு முன்பாக ஆஜராகி, மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்தனர். அதன்பின், இந்தக் குழு விசாரணையில் பங்கேற்ற மஹுவா பாதியிலேயே வெளியேறினார். மேலும், நெறிமுறைக் குழு தலைவர் அநாகரிகமான கேள்விகளை எழுப்புவதாக குற்றம்சாட்டினார். ஆனால், உண்மையான கேள்விகளுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காகவே மஹுவா இந்த நாடகத்தை ஆடியதாகவும், இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அவருக்கு துணை போனதாகவும் நெறிமுறைக் குழு தலைவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதனிடையே, மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிபிஐக்கு லோக்பால் உத்தரவிட்டுள்ளதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே நேற்று தெரிவித்தார். இதற்கு எதிர்வினையாற்றிய மஹுவா மொய்த்ரா, “ரூ.13,000 கோடி மதிப்புள்ள நிலக்கரி ஊழல் தொடர்பாக அதானியிடம் முதலில் சிபிஐ விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யட்டும். பிறகு இங்கு வந்து எனது காலணிகளை அவர்கள் எண்ணலாம்” என்று தெரிவித்துள்ளார்.