`முடிந்த கதை தொடர்வதில்லை!' – `அதிமுக-பாஜக' கூட்டணி குறித்த வாசன் கருத்துக்கு ஜெயக்குமார் பதிலடி!

புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் சாசன் ரசாயன தொழிற்சாலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று, புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “காலாப்பட்டு தொழிற்சாலையில் பல்வேறு விபத்துகள் நடந்திருக்கின்றன. தற்போது ஏற்பட்ட விபத்தில் 16 பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் குடும்பங்கள் தவித்து வருகின்றன. பா.ஜ.க கூட்டணி அரசு, இந்த தொழிற்சாலைக்கு ஏன் தடை போடவில்லை… இந்த நிறுவனத்தால் நான்கு கிராமங்கள் பாதிக்கப்பட்டு, மக்கள் மறியல் செய்திருக்கின்றனர். ஆனால், அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல், தொடர்ந்து மௌனம் காக்கிறது. ஏழை மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. புதுச்சேரியில் இருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்காமல், சென்னைக்குத் தொழிலாளர்களைக் கொண்டு சென்றிருக்கின்றனர்.

ஓ.பி.எஸ்

 இதை அரசு வேடிக்கைப் பார்க்கிறது. மக்கள் கோரிக்கையை ஏற்று, தொழிற்சாலையை மூட வேண்டும். நிபுணர்கள் குழுவை அமைத்து தொழிற்சாலை குறித்து ஆய்வு நடத்த வேண்டும். அந்த நிறுவனம் சுமார் ரூ.10,000 கோடி வருமானம் ஈட்டுகிறது.  தொழிற்சாலை நிர்வாகம் சுற்றியிருக்கும் கிராமத்தினர் நலனைப் பற்றி அக்கறையின்றி செயல்படுகிறது. இதை ஏற்க முடியாது. விபத்து ஏற்பட்ட அந்தத் தொழிற்சாலையை, தொடர்ந்து நடத்த பா.ஜ.க அரசு முயன்று வருகிறது. கவர்னர் தமிழிசை இதில் உடனடியாகத் தலையிட்டு தொழிற்சாலையை மூட வேண்டும். தேசிய அளவிலான வல்லுநர்கள், நிபுணர்களை நியமித்து தொழிற்சாலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு உட்பட அனைத்து பிரச்னைகள் குறித்தும் ஆய்வு நடத்த வேண்டும்.

பா.ஜ.க கூட்டணி அரசு மக்கள் விரோதமாக, தொழிற்சாலையைத் திறக்க முயன்றால், அ.தி.மு.க ஓயாமல் தொடர்ந்து போராடும். இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்து, தொழிற்சாலை சார்பில் யாரையும் கைதுசெய்யவில்லை. நாம் ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா… புதுவையில் சட்டம் ஒழுங்கு இல்லையா என்ற கேள்வி எழுகிறது. அரசு சார்பில் விபத்து குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். புதுவை பா.ஜ.க கூட்டணி அரசின் செயல்பாடுகள் மக்களுக்குத் தெரியும்.

ஜெயக்குமார் – அண்ணாமலை – பாஜக – அதிமுக

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் விரோதப் போக்குடன் இந்த அரசு செயல்படுகிறது. எனவே, வரும் தேர்தலில் புதுவையில் அ.தி.மு.க வெற்றி பெறும். நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் மாநிலச் செயலாளர் அன்பழகன் வெற்றி பெற்றுத் தருவார்” என்றார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “அ.தி.மு.க-வின் கரைவேட்டி கட்டும் தகுதியை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். எம்.ஜி.ஆர் மாளிகையை அ.தி.மு.க-வினர் கோயிலாகக் கருதுகின்றனர்.

அங்கு குண்டர்களோடு புகுந்து அராஜகம் செய்தார். தொடர்ந்து கட்சி விரோதச் செயல்களில் இறங்கினார். இப்போது உயர் நீதிமன்றம் அ.தி.மு.க-வின் பெயர், கட்சிக் கொடி, சின்னத்தை அவர் பயன்படுத்துக் கூடாது எனத் தீர்ப்பளித்திருக்கிறது. இதை அ.தி.மு.க-வினர் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர். கழகத்துக்கு எதிரிகள், துரோகிகளுக்கு இந்த தீர்ப்பு பாடமாக அமைந்திருக்கிறது. இனி கட்சியின் பெயரைப் பயன்படுத்தினால், அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குதான் தொடர வேண்டும். அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அமையும் என வாசன் அவர் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இரண்டு கோடி தொண்டர்களின் மனநிலையை ஏற்று, `பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இல்லை’ என, கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்தியிருக்கிறார். வரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை. முடிந்த கதை தொடர்வதில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.