முழு கொள்ளளவை நெருங்கிய வைகை அணை – வயல்களில் ஆற்று நீர் புகுந்ததால் பயிர்கள் சேதம்

ஆண்டிபட்டி: தொடர் மழையால் வைகை அணை முழுக்கொள்ளவை நெருங்கியுள்ளது. இதனால் தேனி அருகே குன்னூர் வரை கடல்போல் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், பெருக்கெடுத்து வரும் ஆற்றுநீர் தொடர்ந்து அணைக்குள் செல்ல முடியாமல் பக்கவாட்டுப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் ஏராளமான வயல்கள் நீரில் மூழ்கின.

தேனி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால் சில மாதங்களாக வைகை அணையின் நீர்மட்டம் போதிய அளவு உயரவில்லை. இதனால் முதல், இரண்டாம் போகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில வாரங்களாக பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து வெகுவாய் அதிகரித்து நேற்று 69 அடியாக(மொத்த உயரம் 71 அடி) உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

71 அடி வரை நீரை தேக்க முடியும் என்றாலும், பாதுகாப்பு கருதி 69 அடியே முழுக்கொள்ளவாக கணக்கிட்டு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இருப்பினும் நீர்வரத்து குறைய வாய்ப்புள்ளதாலும், இன்று (வெள்ளி) மதுரை மாவட்டம் மேலூர், பேரணை, கள்ளந்திரி பகுதி பாசனத்துக்காக தண்ணீர் திறக்க உள்ளதாலும் உபரிநீரை வெளியேற்றாமல் வரும் நீர் அனைத்தும் தேக்கப்பட்டு வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் இன்று 70.30 அடியாக உயர்ந்தது. அணையைப் பொறுத்தளவில் 6 ஆயிரத்து 91 மில்லியன் கனஅடி நீரை தேக்க முடியும். தற்போது 5 ஆயிரத்து 890 மில்லியன் கனஅடி நீர் தேங்கி உள்ளது. இதனால் 15 சதுர கி.மீ. அளவுக்கு கடல்போல் பரந்து விரிந்து தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது.

முழுக் கொள்ளளவை நெருங்கியுள்ளதால் அடர்த்தியாக தேங்கிக் கிடக்கும் இந்த அணை நீரைக் கடந்து ஆற்று நீர் உட்புக முடியாத நிலை உள்ளது. இதனால் குன்னூர், அம்மச்சியாபுரம் பகுதி வழியே வரும் ஆற்று நீர் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. நேற்று விநாடிக்கு 2 ஆயிரத்து 693 கனஅடிநீர் வரத்து இருந்த நிலையில் இன்று மதியம் நீர்வரத்து 3 ஆயிரத்து 625 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நீர் தேக்கத்தின் பக்கவாட்டுப்பகுதிகளுக்குள் ஆற்று நீர் புகுந்தது.

இதனால் அரப்படித்தேவன்பட்டி, கருப்பத்தேவன்பட்டி, குன்னூர், வைகைப்புதூர், கரட்டுப்பட்டி உள்ளிட்ட ஆற்றங்கரையோர கிராமப் பகுதிகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது. வயல்களில் தண்ணீர் புகுந்ததால் கத்தரி, தக்காளி, சோளம், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்கள் மூழ்கிவிட்டன. தேங்கியே கிடக்கும் இந்த நீரினால் வாழை உள்ளிட்ட பல பயிர்கள் அழுகி சேதமாகி வருகின்றன. இருப்பினும் விநாடிக்கு 69 கனஅடிநீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், :அணையின் 7 பெரிய, 7 சிறிய மதகுகள் மூலம் விநாடிக்கு அதிகபட்சம் 64 ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்ற முடியும். நீர்வரத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 70 அடியை கடந்துள்ளதால் இன்று பாசனத்துக்கு நீர் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.