வாஷிங்டன்:
இணையத்தில் பயனர்கள் தங்களைப் பற்றிய எந்த விவரங்களையும் பதிவு செய்யாமல், மற்றவர்களுடன் பழக அனுமதிக்கும் தளம்தான் ஒமீகிள். சாட்டிங் செய்ய, பேச மற்றும் கலந்துரையாடுவதற்காக இந்த தளம் உருவாக்கப்பட்டது. இதை 2009ஆம் ஆண்டு லீஃப் கே-புரூக்ஸ் என்பவர் தனது 18வது வயதில் உருவாக்கினார்.
தொடங்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, அதாவது மார்ச் 2010-ல் இத்தளம் வீடியோசாட் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.
முதலில், இந்த தளத்தில் 13 வயதுள்ள சிறுவர்கள் தனது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அனுமதியுடன் இணையதளத்தைப் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது. பின்னர், 2022 ஆம் ஆண்டு வந்த சட்டத்தில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இணையதளத்தைப் பயன்படுத்த முடியும் என்றார்கள். 90ஸ் கிட்ஸ்களிடம் இந்த இணையதளம் மிகவும் பிரபலம்.
இந்நிலையில், ஒமீகிள் வீடியோசாட் தளம் 14 ஆண்டுகளுக்கு பிறகு மூடப்பட்டுள்ளது. மன அழுத்தம், செலவு அதிகரிப்பு மற்றும் தளம் தவறாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்து அதிகம் போராடவேண்டியிருப்பதால், மூடும் முடிவை எடுத்ததாக அதன் நிறுவனர் லீஃப் கே-புரூக்ஸ் கூறுகிறார்.
“ஒமீகிள் தளத்தை செயல்படுத்துவது நிதி ரீதியாகவோ அல்லது மனோரீதியாகவோ இனி இயலாது. நீங்கள் இப்போது ஒமீகிள் இணையதளத்தை திறந்தால், ”ஒமீகிள் 2009-2023” என்று ஒரு கல்லறை வாசகத்தை காண்பீர்கள்” என்றும் புரூக்ஸ் குறிப்பிட்டார்.