Diwali Celebration at British Prime Ministers House | பிரிட்டன் பிரதமர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்

லண்டன்: பிரிட்டன் பிரதமரின் அரசு இல்லத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில், பிரதமர் ரிஷி சுனக், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி பண்டிகையை துவக்கி வைத்தனர்.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக உள்ளார்.

இங்கு லட்சக்கணக்கான இந்தியர்கள் தகவல் தொழில்நுட்பம், அரசியல், தொழில் என பல துறைகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

இதனால் பிரிட்டனில் ஆண்டுதோறும் ஹிந்துக்களின் பண்டிகை அரசு சார்பிலேயே சிறப்பாக கொண்டாடப்படும்.

அந்த வகையில் இந்தாண்டு தீபாவளி கொண்டாட்டம் பிரிட்டனில் முன்னதாகவே துவங்கியுள்ளது. மேலும், பிரதமர் ரிஷி சுனக் பிரதமர் பொறுப்பேற்று வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்துள்ளார்.

இதனால் தீபாவளியை மிகச் சிறப்பாக கொண்டாட விரும்பினார்.

அதற்காக லண்டனில் உள்ள பிரதமரின் அரசு பங்களா மலர்களாலும், வண்ண வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டன.

இந்திய வம்சாவளியினர், எம்.பி.,க்கள், தொழிலதிபர்கள், பாலிவுட் பிரபலங்கள் ஆகியோர் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

பாரம்பரிய முறைப்படி பிரதமர் ரிஷி சுனக்கும், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் குத்து விளக்கேற்றி தீபாவளியை கொண்டாடினர். பின்னர் இந்திய வம்சாவளியினரிடம் பிரதமர் ரிஷி சுனக் பேசியதாவது:

இந்தியா ஜி-20 மாநாட்டை நடத்தியதை உலக அரங்கில் முக்கிய தருணமாக பார்க்கிறேன். அந்த நிகழ்வில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரிட்டன் பிரதமராக, பிரதமர் மோடியுடன் பங்கேற்றதை சிறப்பாக கருதுகிறேன்.

எதிர்காலத்திற்கு வழிகாட்டும் இங்குள்ள அறிவார்ந்த மக்களுடன் இந்த தீபாவளியை கொண்டாடுவது மகிழ்ச்சியை தருகிறது. அனைவருக்கும் சுப தீபாவளி.

இவ்வாறு அவர் கூறினார்.

கமலா ஹாரிஸ் வாழ்த்து

அமெரிக்க துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரிஸ் தன் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர். அவர்கள் மத்தியில் பேசிய கமலா ஹாரிஸ், ‘ஒளியை கொண்டாடும் பண்டிகை தான் தீபாவளி. உலகில் பல இடங்களில் போர் எனும் இருள் சூழ்ந்திருக்கும் வேளையில், தீபாவளி போன்ற ஒளி பாய்ச்சும் பண்டிகைகளை கொண்டாட வேண்டியது அவசியம்’ என கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.