Japan: கிலோ கணக்கில் தங்கக் கொள்ளை; சினிமாவில் கற்ற உத்திகள்; தமிழ் சினிமா ஆசை; யாரிந்த முருகன்?

ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது ‘ஜப்பான்’ திரைப்படம்.

இப்படத்தில் நடிகர் கார்த்தி, காவல்துறை, அரசியல்வாதிகளைத் திகைக்க வைக்கும் அளவிற்குப் போக்குக் காட்டி பெரும் நகைக்கொள்ளைச் சம்பவங்கள் செய்யும் கொள்ளைக்காரனாக நெகட்டிவ் கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இக்கதாபாத்திரம் திருவாரூரைச் சேர்ந்த நகைக் கொள்ளையனான முருகனின் ஒரு கொள்ளைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது எனச் சொல்லப்படுகிறது.

கொள்ளையன் முருகன்

பல மாநிலங்களில் கிலோ கணக்கில் நகைக்கொள்ளை, 2 தெலுங்கு சினிமாத் தயாரிப்பு, தமிழ் சினிமா எடுக்கும் ஆசை… யாரிந்த நகைக் கொள்ளையன் முருகன்?

தமிழ்நாடு மட்டுமல்ல, பல மாநிலங்களில் பெரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுக் காவல்துறையை அதிரவைத்த முருகன், 1995-ம் ஆண்டு முதல் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தவர். ஆரம்பத்தில் சிறு சிறு திருட்டுச் சம்பவங்கள் செய்து வந்த இவர், கோவைத் திருட்டு ஒன்றில் காவல்துறையிடம் மாட்டிக்கொள்கிறார். அதன்பிறகு, ‘இனி எதைப் பண்ணினாலும், பிளான் பண்ணிதான் பண்ணணும்’ என்று, காவல்துறையிடம் சிக்காமல் எப்படிக் கொள்ளையடிப்பது எனப் பல ராபெரி திரைப்படங்களைப் பார்த்து உத்திகளைக் கற்றுக்கொள்கிறான்.

இதையடுத்து முருகன், தன்னுடைய கூட்டாளிகளான மணிகண்டன், சுரேஷ், சுரேஷின் தாயார் கனகவல்லி உள்ளிட்டோருடன் சேர்ந்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றார்.

பல மாநிலங்களில் இவர்மீது ஏராளமான வழக்குகள் இருந்தாலும், காவல்துறைக்குப் போக்குக் காட்டி முருகனும், கூட்டாளிகளும் தங்கள் அடையாளங்களை மாற்றிக்கொண்டு தலைமறைவாக பல கொள்ளைச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

திருச்சியில் லலிதா ஜூவல்லரி கொள்ளையில் சிக்கிய சிசிடிவி காட்சிகள்

கொள்ளைச் சம்வத்தின் போது இவர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள வாக்கி டாக்கியைப் பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், அதுவும் ஒருகட்டத்தில் காவல்துறைக்குத் தெரியவர, நூல் டெக்னிக்கைப் பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். நூல் அல்லது கயிற்றைக் கட்டிக்கொண்டு கட்டடத்தின் உள்ளே கொள்ளையடிக்கச் செல்வார்களாம். ஆபத்தென்றால், வெளியில் இருப்பவர் அந்த நூலை இழுத்து எச்சரிக்கை செய்வாராம்! இப்படிப் பல உத்திகளில் இவர்கள் கொள்ளையடித்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொள்ளையடித்த நகைகளைப் புதைத்து வைப்பதுதான் முருகனின் ஸ்டைல். தகுந்த நேரத்தில் புதைத்த நகைகளை எடுத்து உருக்கி, விற்றுப் பணமாக மாற்றியுள்ளார். அப்படி மாற்றிய பணத்தை வீட்டில் உள்ள டிரம்மில் நிரப்பி வைப்பதுதான் அவருக்கு ராசியானதாம்!

திருச்சி கொள்ளிடக்கரை, மதுரை வாடிப்பட்டி மலையடிவாரம் எனப் பல இடங்களில் இவர் புதைத்த கிலோ கணக்கிலான நகைகள் மீட்கப்பட்டிருக்கின்றன.

முருகனுக்கு சினிமா ஆசை வர, அவரது கூட்டாளியான சுரேஷை வைத்து, கொள்ளையடித்த நகைகள் மூலம் தெலுங்கு சினிமாவில் இரண்டு படங்களையும் எடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், சினிமா எடுக்கும் சாக்கில் தெலுங்கில் பல நடிகைகளுக்கு நகைகளைப் பரிசாகக் கொடுத்து வளைத்துப்போட்டது எனப் பல விஷயங்களைச் செய்திருக்கிறார் முருகன்.

‘சிக்காமல் இருந்திருந்தால், கொள்ளையடித்த நகைகள் மூலம் கிடைத்த பணத்தில் தமிழில் சிறந்த திரைப்படம் ஒன்றைத் தயாரித்திருப்பேன்’ என்றெல்லாம் விசாரணையில் முருகன் கூறியது அந்த நேரத்தில் ஹாட் டாபிக்.

திருவாரூர் முருகன்

‘பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’ என்பது என்றைக்கும் பொய்த்துப்போகாத பழமொழி. அதற்கேற்ப, 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருச்சி லலிதா ஜுவல்லரியில் 28 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை மிக்கி மவுஸ் முகமூடி, ஜெர்க்கின் என ‘ஜோக்கர்’ பட பாணியில் முருகனும், அவனது கூட்டளிகளும் கொள்ளையடித்துள்ளனர்.

தமிழ்நாட்டையே அதிரவைத்த இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் திருவாரூர் அருகே காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில் முருகனின் கூட்டாளி மணிகண்டன் மாட்டிக் கொள்கிறார். இதையடுத்து விசாரணையில் பல உண்மைகள் வெளிவரத் தொடங்கின. முருகனையும் அவனது கூட்டாளிகளையும் கைதுசெய்ய ஸ்கெட்ச் போட்ட காவல்துறை முருகனின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களை விசாரணை வளையத்துக்குக் கொண்டுவந்தது.

இதனால் நெருக்கடிக்குள்ளான முருகன், பெங்களூரில் கர்நாடகக் காவல்துறையிடம் சரணடைந்துவிடுகிறான். அதன்பின், மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு பெங்களூரு நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தமிழகக் காவல்துறை முருகனை கஸ்டடி எடுத்து 7 நாள்கள் விசாரணை நடத்தியது. விசாரணையில் தான் கொள்ளயடித்தது பற்றிய பல உண்மைகளைச் சொல்லிவிடுகிறான். இருப்பினும் திருச்சி லலிதா ஜுவல்லரி, திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த 457 பவுன் தங்க நகைகள் உட்பட தமிழ்நாட்டில் கொள்ளையடித்த கிலோ கணக்கிலான நகைகள் மீட்கப்பட்டன.

பெங்களுரூ மருத்துவமனையில்கொள்ளையன் திருவாரூர் முருகன்

பின்னர், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட முருகன், இடது கை, கால் வாதநோய், எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களுடன் வாய்பேச முடியாமல் அவதிப்பட்டுள்ளார். ‘குற்றமே தண்டனை என்பார்களே’ அதுபோல, கடைசிக் காலத்தில் தான் வாழ்ந்த ஒவ்வொரு நொடியும் பெரும் வலிகளுடனும், நோயுடனும் போராடி சட்டதால் தண்டிக்கப்பட்டதைவிட செய்த குற்றங்களாலே தண்டிக்கப்பட்டார். இப்படி நாளுக்கு நாள் அவனது நிலை மிகவும் மோசமாக பெங்களூரு, சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

யாருக்கும் பிடிபடாத வீரனாக, ஹீரோக்களின் பிம்பமாகத் தன்னை உணர்ந்துகொண்டு குற்றங்கள் செய்பவர்களின் முடிவுரைகளெல்லாம் இப்படியாகத்தான் எழுதப்படுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.