கொச்சி: சபரிமலை அய்யப்பன் கோவிலில் சமீபத்தில் நடந்த மேல்சாந்தி தேர்வை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, கேரள உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் தலைமை பூசாரி மேல்சாந்தி என அழைக்கப்படுகிறார். ஆண்டுக்கு ஒருமுறை புதிய மேல்சாந்தி தேர்வு நடக்கிறது.
தற்போதுள்ள மேல்சாந்தியின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அடுத்த மேல்சாந்திக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது.
குலுக்கல் முறையில் நடந்த தேர்வில், புகழ்பெற்ற பரமேக்காவு பகவதி அம்மன் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றிய பி.என்.மகேஷ், அய்யப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இதை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்தக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மதுசூதனன் நம்பூதிரி மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த தேர்வில் நான்கு சீட்டுகளில் இரண்டு சீட்டுகள் மடிக்கப்பட்டு இருந்தன. இரண்டு சீட்டுகள் சுருட்டி வைக்கப்பட்டு இருந்ததன. பானையில் போடப்பட்ட சீட்டுகள் முறையாக குலுக்கப்படவில்லை.
சுருட்டி வைக்கப்பட்டு இருந்த சீட்டு எளிய முறையில் எடுக்கப்பட்டதால், தேர்வை ரத்து செய்து புதிதாக நடத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.
இந்த மனு, கேரள உயர் நீதிமன்ற தேவசம் போர்டு அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், ஊடகங்களில் வெளியான காட்சி பதிவுகள் ஆகியவை, தேவசம் போர்டு சார்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இதையடுத்து, ‘மேல்சாந்தி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் தலையிட எந்த முறையான காரணமும் இல்லை’ எனக் கூறி மனுவை அமர்வு நிராகரித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement