அமர் பிரசாத் ரெட்டி உள்பட பாஜகவினர் 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை ஐகோர்ட்

சென்னை: பாஜக கொடிக்கம்பம் அமைக்கும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அக்கட்சியின் மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்பட 6 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பனையூரில் உள்ள பாஜக தலைவர் அண்ணாமலையின் வீடு அருகே சுமார் 50 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்தஅக். 20-ம் தேதி நள்ளிரவு பாஜகவினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே எழுந்த பிரச்சினை காரணமாக, அங்கு கொடிக்கம்பம் நடக் கூடாது என்று போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, பாஜகவினருக்கும், காவல் துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் பொக்லைன் வாகன கண்ணாடி உள்ளிட்ட வற்றை பாஜகவினர் அடித்து உடைத்தனர். இது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜகவினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 6 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்ப ராஜ், “இந்த விவாகரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்டுள்ளனர். எனவே, அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதனால், அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. மேலும், கொடிக்கம்பம் வைக்க ஏற்கெனவே அனுமதி மறுக்கப்பட்டது. அதனை மீறி கொடிக்கம்பம் வைத்துள்ளனர். மேலும் உடைக்கப்பட்ட ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியின் மதிப்பு ஐம்பதாயிரம் ரூபாய்” என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “வழக்கின் தற்போதைய நிலை என்ன? அவர் இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். பின்னர், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர், இரண்டு வாரங்களுக்கு கானாத்தூர் காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், ஜேசிபி இயந்திரம் சேதப்படுத்தப்பட்டதற்காக அதன் உரிமையாளருக்கு 6 பேரும் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 12 ஆயிரம் ரூபாயை இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அரசிடம் அனுமதி பெறாமல் சம்பந்தப்பட்ட இடத்தில் கொடிக்கம்பம் வைக்க கூடாது எனவும் உத்தரவிட்டார். அப்போது 55 அடி உயரத்தில் கொடிக்கம்பம் வைத்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, அவ்வளவு உயரத்தில் வைத்தால் எந்தக் கொடி என்று யாருக்கு தெரியும்? என கேள்வி எழுப்பினார். இதனால் நீதிமன்றத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.