கரூர் மாநகர திரையரங்குகளில் கட்டணம் ரூ.130-லிருந்து ரூ.150 ஆக உயர்வு

கரூர்: கரூர் மாநகர ஏசி திரையரங்குகளில் கட்டணம் ரூ.130-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கரூர் மாநகரில் 3 திரையரங்க வளாகங்களில் தலா இரு திரையரங்குகள் என 6, இரு தனி திரையரங்கம் என மொத்தம் 8 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் 7 ஏசி திரையரங்குகளாகும். இவற்றில் இதுவரை ரூ.130 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. பிரபல நடிகர்கள் மற்றும் பிரமாண்ட படங்கள் வெளியாகும் போது ரூ.190 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு 3 புதிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

புதிய திரைப்படங்கள் வெளியாகியுள்ள 5 திரையரங்குகளில் திடீரென கட்டணம் ரூ.130-லிருந்து இன்று (நவ.10-ம் தேதி) முதல் ரூ.20 அதிகரிக்கப்பட்டு புதிய கட்டணமாக ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் திரையரங்குகளில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்தாண்டு ஜனவரி மாதம் வரை 7 ஏசி திரையரங்குகளில் ரூ.110 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. திரையரங்குகளுக்கான 12 சதவீத ஜிஎஸ்டி கட்டணம் பிப்.1-ம் தேதி முதல் 18 சதவீதம் உயர்த்தப்படுவதாக கூறி கடந்தாண்டு திரையரங்க கட்டணம் பிப்.1-ம் தேதி முதல் ரூ.10 உயர்த்தப்பட்டு ரூ.120 ஆக உயர்த்தப்பட்டது.

55 நாட்களிலேயே மீண்டும் ரூ.10 கட்டணம் உயர்த்தப்பட்டு கடந்தாண்டு மார்ச் மாதத்தில் திரையரங்குகளில் ரூ.130 வசூலிக்கப்பட்டது. கடந்தாண்டு இரு முறை திரையரங்க கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் நிகழாண்டு ரூ.20 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் திரையரங்கங்களில் விற்பனையாகும் தின்பண்டங்களின் விலையும் ரூ.10 அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.