காலியாக உள்ள முதுநிலை மருத்துவ இடங்களை நிரப்ப கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் காலியாக உள்ள 128முதுநிலை மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதிக்க கோரி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எம்பிபிஎஸ், மருத்துவ காலி இடங்களை நிரப்ப காலஅவகாசம் கோரி எழுதிய கடிதத்துக்கு சாதகமான பதிலை அளித்தீர்கள். அதனால், மாநிலத்தில் காலியாக உள்ள விலைமதிப்பற்ற எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதேபோல், எம்டி– எம்எஸ், டிஎன்பி, மற்றும் எம்டிஎஸ்,இடங்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு அக்.25-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

நான்கு சுற்று கலந்தாய்வு முடிவில் 69 எம்டி– எம்எஸ், 11 டிஎன்பி, 48 எம்டிஎஸ் என 128 முதுநிலை இடங்கள் காலியாக உள்ளன. இந்தஇடங்களை நிரப்புவது மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் உதவியாக இருக்கும். எனவே, கூடுதல்சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதிக்கும் வகையில், முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதியை நீட்டிக்குமாறு, தேசிய மருத்துவ கவுன்சில்மற்றும் பல் மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்.

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளை பொருத்தவரையில், தமிழகத்தில் அதிக இடங்கள் உள்ளன. அந்த இடங்களில் மாநில ஒதுக்கீட்டில் 50 சதவீதம், அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டின் வாயிலாக, அனைத்து தரப்புமக்களுக்கும் மருத்துவ சேவை கிடைக்கும். இதற்கு, அனுமதி அளித்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அதேபோல், முதுநிலை மருத்துவ இடங்களை நிரப்பும் விவகாரத்தில், மாணவர்களுக்கும், மாநில சுகாதார அமைப்புக்கும் பெரும் பயனளிக்கும், ஆக்கப்பூர்வமான பதிலை விரைந்து பெறுவோம் என நம்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.