கோவை: கோவையில் பெய்த கனமழையால், 30 ஆண்டுகளுக்கு பிறகு சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கோவை வடக்கு பகுதியில் உள்ள பிரதான நீர் ஆதாரமான சின்ன வேடம்பட்டி ஏரி, சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியானது நீரின்றி பல ஆண்டுகளாக வறண்டு கிடந்தது. இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அரசின் நமக்கு நாமே திட்டம் மூலம் சுமார் ரூ.60 லட்சம் செலவில் ஏரி மற்றும் ராஜ வாய்க்கால் புனரமைப்பு பணிகள் தொடங்கின.
மொத்த நிதியில் 50 சதவீதத்தை தனியார் நிறுவனமும், மாநகராட்சி சார்பில் 50 சதவீத நிதியும் அளிக்கப்பட்டது. இது தவிர, கடந்த சில ஆண்டுகளாக சின்ன வேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பு மற்றும் கவுசிகா நீர் கரங்கள் கூட்டமைப்பு மூலமாக இங்கு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு வரும் ராஜ வாய்க்காலில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இது தொடர்பாக சின்னவேடம்பட்டி ஏரி பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் கூறுகையில், “இவ்வாறு அதிகப்படியான நீர்வரத்து இருப்பது கடந்த 30 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். நல்ல மழைப்பொழிவு காரணமாக, பன்னீர்மடை தடுப்பணை, கணுவாய் தடுப்பணை ஆகியவை நிறைந்து சின்னவேடம்பட்டி ஏரி ஊட்டு வாய்க்காலுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்ததன் பயனாக ஏரியின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்தது.
தொடர்ந்து மழைப்பொழிவு இருப்பின், நடப்பாண்டு ஏரி நிறைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் ஏரியின் கிழக்குப்பகுதிகளான காளப்பட்டி, வெள்ளானைப்பட்டி, செரையாம்பாளையம், ஆண்டக்காபாளையம், மைலம்பட்டி விளாங்குறிச்சி, அரசூர் வரை நிலத்தடி நீர்மட்டம் உயரும்” என்றார்.
தொடர்ந்து பராமரிக்க வேண்டும்: கவுசிகா நீர்கரங்கள் நிறுவனர் செல்வராஜ் கூறும் போது, “எந்த ஏரி, குளத்துக்கும் தண்ணீர் வராது என நினைக்கக் கூடாது. அவற்றுக்கு வரும் கால்வாய்களை அவ்வப்போது தூர்வாரி சீர் செய்து வைத்திருக்க வேண்டும். அப்படி தூர் வாரி, சீரமைத்து வைத்திருந்ததால் தான் உரிய இடத்துக்கு நீரை கொண்டு சேர்க்க முடியும் என்பதற்கு சின்ன வேடம்பட்டி ஏரி மிகச் சிறந்த உதாரணம். இதனால், துடியலூர், வெள்ளக்கிணறு பகுதியில் பெரிய அளவிலான பாதிப்புகள் தவிர்க் கப்பட்டுள்ளது. இல்லையெனில், பல இடங்களில் வெள்ளநீர் புகுந்திருக்கும்” என்றார்.
நீர்வள ஆதார துறையினர் கூறும் போது, “சின்ன வேடம்பட்டி ஏரிக்கு சுமார் 14 மணி நேரம் நீர்வரத்து இருந்துள்ளது. இதனால், 30 சதவீதத்துக்கும் மேல் ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. தொடர்ந்து 3,4 நாட்கள் மழைநீடித்தால் ஏரி நிறைய வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு 1991-ம் ஆண்டில் ஏரியில் 50 சதவீதத்துக்கு மேல் நீர் நிரம்பியுள்ளது. இது தவிர, கோவை வடக்கு பகுதியின் இதர நீர் ஆதாரங்களான அக்ரஹார சாமக்குளம், காலிங்கராயன் குளம் (எஸ்.எஸ்.குளம்) ஆகியவையும் 30 சதவீதத்துக்கும் மேல் நிரம்பியுள்ளன. அன்னூர் குளம் 70 சதவீதம் நிரம்பியுள்ளது” என்றனர்.