சென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதியில் நிலவுகிறது. குமரிக் கடல்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும்,கிழக்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாகதமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (நவ. 10) பெரும்பாலானஇடங்களிலும், நாளை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 12, 13, 14-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 15-ம் தேதி சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி,தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.