நிதிஷ் குமார் அப்படிப் பேசியது அறியாமையா… ஆணாதிக்கமா? – சர்ச்சை பேச்சும் பின்னணியும்!

பீகார் மாநில அரசு நடத்திய சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு குறித்த விவரங்களை சட்டமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்தார் முதல்வர் நிதிஷ் குமார். அப்போது பேசிய அவர், “பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தால், குழந்தைப் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கணவரை எப்படிச் சமாளிப்பது என்பதை அவர்கள் அறிந்துகொள்வர். அந்த வகையில், பீகாரில் தற்போது பெண்களின் கல்வியறிவு அதிகரித்துவருகிறது” என்றார்.

நிதிஷ் குமார்

முதல்வர் நிதிஷ் குமாரின் இந்தக் கருத்து, பெரும் சர்ச்சையாக மாறியது. இந்தப் பேச்சுக்காக அவர் மன்னிப்புக் கோர வேண்டும் என்று பெண்கள் அமைப்புகள் கோரிக்கை எழுப்பின. பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும் பிரச்னையைக் கிளப்பினர்.

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததற்காக நிதிஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பீகார் சட்டமன்றத் தலைவருக்கு, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா உடனடியாக கடிதம் எழுதினார். நிதிஷ் குமாரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து சட்டமன்றத்தில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ-வான விஜய்குமார் சின்ஹா, “மாநிலத்தை ஆளும் தகுதியை நிதிஷ் குமார் இழந்துவிட்டார். முதல்வர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டும்” என்றார்.

நிதிஷ் குமார்

பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது பேச்சுக்காக சட்டமன்றத்தில் முதல்வர் நிதிஷ் குமார் மன்னிப்புக் கோரினார். மேலும், தனது பேச்சு குறித்து அவர் விளக்கமும் அளித்தார். “பெண்களின் கல்வி நிலைக்கும் கருவுறுதல் விகிதத்துக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில்தான், அந்தக் கருத்தைத் தெரிவித்தேன்.

அந்தக் கருத்து சர்ச்சையானதால், சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசியபோது, என் கருத்துக்காக மன்னிப்புக் கோரினேன். என் கருத்து யாரையாவது காயப்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார் நிதிஷ் குமார்.

மணிப்பூர் வன்முறை போன்ற பல விவகாரங்கள் குறித்து மௌனம் சாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி, நிதிஷ் குமாரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு உடனடியாக எதிர்வினையாற்றினார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நிதிஷ் குமாரின் பெயரைக் குறிப்பிடாமல் சாடினார்.

மோடி

“தாய்மார்களும் சகோதரிகளும் இருக்கும் சட்டமன்றத்தில், அநாகரிகமான வார்த்தைகளை இந்தியா கூட்டணியின் தலைவர் பயன்படுத்தியிருக்கிறார். இது, யாரும் கற்பனைக்கூட செய்ய முடியாதது. தாய்மார்களையும் சகோதரிகளையும் அவமதிக்கும் அந்தப் பேச்சுக்கு எதிராக இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ஒரு தலைவர்கூட பேசவில்லை” என்றார் மோடி.

நிதிஷ் குமார் அவ்வாறு பேசியது ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு என்ற விமர்சனத்தையும் சிலர் முன்வைக்கிறார்கள். ஆனால் பா.ஜ.க-வினர், “நிதிஷ் குமார் நினைவாற்றலை இழந்துவிட்டார். அவரைப் பரிசோதனை செய்ய வேண்டும்” என்கிறார்கள். இன்னொரு தரப்பினர், “சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்திவிட்டதால் ஏற்பட்ட உற்சாக மிகுதியால், அவை நாகரிகத்தை மறந்து அப்படி அவர் பேசிவிட்டார்” என்கிறார்கள். பீகார் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், “முதல்வர் நிதிஷ் பேசிய கருத்து பாலியல் கல்வி தொடர்பானது.

தேஜஸ்வி யாதவ்

இந்த விஷயத்தைப் பேசுவதற்கு மக்கள் தயங்குவார்கள். ஆனால், இது பள்ளிக்கூடத்திலேயே போதிக்கப்படுகிறது. அதை குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்துதான் அவர் பேசினார். இதை ஒரு பாலியல் கல்வியாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, இதைத் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.

சட்டமன்றத்தில் நிதிஷ் குமார் பேசிய விதமும் கருத்தும் விமர்சனத்துக்குரியது. அதே நேரத்தில், வழக்கம்போல இதை பா.ஜ.க தனது அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது என்ற பார்வையை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.