விவாதத்தில் என் மகளை எப்படி இழுக்கலாம்..? விவேக் ராமசாமியை வெளுத்து வாங்கிய நிக்கி ஹாலே

மியாமி:

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விவாத நிகழ்ச்சி மியாமியில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி, தெற்கு கரோலினாவின் முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ், செனட்டர் டிம் ஸ்காட் மற்றும் நியூ ஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி ஆகிய 5 வேட்பாளர்கள் பங்கேற்று விவாதித்தனர்.

சீன நிறுவன தயாரிப்பான டிக்டாக் செயலியில் கணக்கு தொடங்கி உள்ளதாகவும், இதன் மூலம் இளம் வாக்காளர்களுக்கு தனது கருத்துக்கள் எளிதாக சென்றடையும் என தாம் நம்புவதாகவும் விவேக் ராமசாமி கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்திருந்தார்.

ஆனால், சீன செயலிகளில் உள்ள பயனர் தகவல்களை சீனா களவாடி, தவறாக பயன்படுத்துவதாக ஒரு பிரசாரம் அமெரிக்காவில் பரவி வருகிறது. இச்செயலியை தடை செய்யவும் அங்கு பலர் அரசுக்கு கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர். விவேக் ராமசாமி இந்த செயலியை பயன்படுத்தி வருவது குறித்து நிக்கி ஹேலி விமர்சித்திருந்தார்.

நேற்றைய விவாதத்தில் இது பூதாகரமாக வெடித்தது. நிக்கியின் முந்தைய விமர்சனத்திற்கு பதிலளித்த விவேக், “நான் டிக்டாக் செயலியை பயன்படுத்துவதை கடந்த விவாதத்தின்போது நிக்கி கேலி செய்தார். ஆனால், அவரது மகளே அந்த செயலியை நீண்ட காலமாக பயன்படுத்தி வருவது உண்மை. எனவே நிக்கி அவர்களே, முதலில் உங்கள் குடும்பத்தை சரி செய்ய பாருங்கள்” என கூறினார்.

அப்போது இடைமறித்த நிக்கி, “என் மகளை விவாதத்தில் இழுக்காதீர்கள். நீங்கள் ஒரு கழிசடை” என கடுமையாக பேசினார். இதனால் அரங்கம் பரபரப்பானது.

நிக்கியின் ஆக்ரோஷமான கருத்துக்கு மீண்டும் பதிலளித்த விவேக், “அடுத்த தலைமுறையினர் இதனை பயன்படுத்துகின்றனர் என்பதனையே நான் குறிப்பிட்டேன்” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.