Due to the sudden rains, Delhiites are happy as the air pollution has reduced drastically | திடீர் மழையால் டில்லிவாசிகள் மகிழ்ச்சி காற்று மாசு வெகுவாக குறைந்தது

புதுடில்லி:திடீரென பெய்த மழையால் டில்லியில் காற்றின் தரம் மேம்பாடு அடைந்தது. இதனால் டில்லி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுடில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் 10 நாட்களுக்கும் மேலாக காற்றின் தரம் மிகமோசமான நிலையில் நீடித்தது. சமீபத்தில், அபாய கட்டத்துக்குள் சென்றது.

பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டனர். பள்ளிகளுக்கு வரும் 18ம் தேத் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதியோர் பொதுவெளியில் வர வேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தியது.

நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு காற்றின் தரக் குறியீடு 460 என்ற நிலையில் அபாய கட்டத்தில் இருந்தது. இந்நிலையில், நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் டில்லியில் 6 மி.மீ., மழை பெய்தது. காலை 8.30 முதல் 11.30 மணி வரை 2.2 மி.மீ., மழையும் பெய்துள்ளது.

இதையடுத்து, காற்று மாசு வேகமாக குறையத் துவங்கியது. இதனால் டில்லிவாசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்திய வானிலை ஆய்வு மைய மூத்த விஞ்ஞானி குல்தீப் ஸ்ரீவஸ்தவா, “பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று வரை பரவலாக மழை பெய்தது. தீபாவளிக்கு முன்பே லேசான மழை பெய்து காற்றின் தரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும் என ஏற்கனவே நாங்கள் கணித்திருந்தோம். இன்று முதல் காற்றின் வேகம் மணிக்கு 15 கி.மீ., என்ற வேகத்தில் அதிகரிக்கும். இது காற்று மாசுவை அகற்ற உதவும்,”என்றார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி வினய் குமார் சேகல், “பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் இன்னும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என எதிர்பார்ப்பதால், காற்றில் ஏற்பட்டுள்ள மாசு வெகுவாகக் குறையும்,”என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.