Pak., people are suffering from shortage of papers | காகிதங்களுக்கு பற்றாக்குறை திண்டாடும் பாக்., மக்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், புதிய பாஸ்போர்ட்டுகளை அச்சடிக்க, ‘லேமினேஷன்’ காகிதங்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால், வெளி நாடுகளுக்குச் செல்ல முடியாமல் அந்நாட்டு மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஐரோப்பிய நாடான பிரான்சிடம் இருந்து, பாஸ்போர்ட் அச்சிடுவதற்கு தேவையான லேமினேஷன் காகிதங்களை இறக்குமதி செய்து வருகிறது.

அந்நாட்டில் தற்போது லேமினேஷன் காகிதங்களுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.

இதனால், பாகிஸ்தானில் உரிய நேரத்தில் பாஸ்போர்ட் அச்சிட்டு கொடுக்க முடியாமல் அதிகாரிகள் திண்டாடுகின்றனர்.

பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளில் படிக்க வாய்ப்பு கிடைத்தும், குறித்த நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்காததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கல்வி, வேலை, சுற்றுலாவுக்காக வெளி நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த அந்நாட்டு மக்கள், வீடுகளுக்குள்ளே முடங்கி உள்ளனர்.

இது குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், ‘இத்தாலிக்கு செல்ல சமீபத்தில் எனக்கு விசா கிடைத்தது. நான், அக்டோபரில் அங்கு சென்றிருக்க வேண்டும். பாஸ்போர்ட் கிடைக்காததால், எனக்கு அங்கு சென்று படிக்கும் வாய்ப்பு பறிபோய்விட்டது’ என்றார்.

பாகிஸ்தானில் இது போன்ற நெருக்கடி ஏற்படுவது இது முதன்முறையல்ல. 2013ம் ஆண்டிலும், லேமினேஷன் காகிதங்கள் பற்றாக்குறையால், பாஸ்போர்ட் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.