STR 48 Exclusive : "ரஜினி சாருக்கு சொன்ன கதை; கமல் சார் சொன்ன கமென்ட்" – தேசிங்கு பெரியசாமி

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகை திரும்பிப்பார்க்க வைத்தவர் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் பாராட்டினார். அவரின் தீவிர ரசிகனான தேசிங்கிற்கு அதைவிட மகிழ்ச்சி என்ன இருக்கப்போகிறது ?

இதனைத் தாண்டி, அவரை இயக்கவும் வாய்ப்பு கிடைத்து, அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், சில பல காரணங்களால் அந்தப் படம் நடக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, தேசிங்கு பெரியசாமி யாரை இயக்குவர் என்ற ஆவலும் எதிர்பார்ப்பும் இருந்த சூழலில், சிம்புவை இயக்கவிருக்கிறார், அதனை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. படம் எந்த அளவில் இருக்கிறது? என்னென்ன பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன? போன்ற தகவல்களை அறிந்துகொள்ள இயக்குநர் தேசிங்கு பெரியசாமியிடம் பேசினேன். 

நீங்க சிம்புவை வெச்சு இயக்கப்போற படம் எப்படி அமைஞ்சது ?

” ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ முடிஞ்சவுடன், என்கிட்ட பவுண்டட் ஸ்கிரிப்டா எதுவுமில்லை, ஐடியாவா மட்டும்தான் இருந்துச்சு. எனக்கு எப்போவும் ஒரு கதையை ஒரு இடத்துல சொல்றோம்னா, ஆரம்பத்துல இருந்து கடைசி வரை இருக்கணும்னு நினைப்பேன். ஒன்லைன் மட்டும் சொல்லிட்டு, அதுக்குப்பிறகு, ஆறு மாசம், ஏழு மாசத்துல ரெடி பண்ணிட்டு ஷூட்டிங் போகக்கூடாதுனு ரொம்ப கவனமா இருந்தேன். அதனால, எவ்வளவு தாமதமானாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் முதல் ட்ராஃப்டாவது எழுதி முடிச்ச பிறகு கதை சொல்ல ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். அப்படி ஒரு ஸ்கிரிப்டை தயார் பண்ணினேன். அது நடக்கிற மாதிரி இருந்து நடக்காமல் போயிடுச்சு. ஆனா, எனக்குள்ள இந்தக் கதையைத்தான் ரெண்டாவது படமா பண்ணணும்னு தோணிக்கிட்டே இருந்தது. அப்போதான், சிம்பு அவர்களுக்கு கதை சொல்ற வாய்ப்பு கிடைச்சது. அவர் கதை கேட்டவுடனே ரொம்பப் பிடிச்சுப்போய், ‘என்னுடைய அடுத்தப் படம் இதுதான். இதுக்கு இடையில நான் வேறெந்த படமும் பண்ணப்போறதில்லை’னு சொல்லிட்டார். இப்படிதான் ஆரம்பமானது இந்தப் படம்”

நீங்க ரஜினிக்கு சொன்ன கதைதான் இப்போ சிம்பு நடிக்கிறதுன்னு சமூக வலைதளங்கள்ல வெளியான செய்தி உண்மையா ?

ரஜினிகாந்த் – தேசிங்கு பெரியசாமி

“ஆமா, உண்மைதான். அவருக்கு பண்ணின கதைதான். ஆனா, இப்போ சிம்புவுக்குனு வரும்போது எதுவும் மாத்த வேண்டிய தேவை வரலை. காரணம், அவரால இதுல இருக்கிற எல்லா விஷயங்களையும் சூப்பரா பண்ணமுடியும். மிகச்சரியா இந்தக் கதைக்குப் பொருத்தியிருந்தார் சிம்பு. அவருடைய மேனரிஸம், உடல்மொழி, டயலாக் டெலிவரி இந்த மாதிரி விஷயங்களுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாத்தியிருக்கேனே தவிர, கதையா மாத்தல”

நீங்க சிம்புவுக்கு கதை சொல்லும்போது, அவர் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பார்த்திருந்தாரா ? நீங்க கதை சொல்லும்போது, அவர் எப்படி ரியாக்ட் பண்ணினார்?

“ம்ம்… படம் ரிலீஸான சமயத்திலேயே பார்த்துட்டு எனக்கு போன் பண்ணி 25 நிமிஷம் பேசினார். அவருக்கு அந்தப் படம் ரொம்பப் பிடிச்சிருந்தது. டெக்னிக்கலாகவும் நிறைய விஷயங்கள் கவனிச்சுப் பாரட்டினார். அப்போதிலிருந்து நானும் அவரும் அப்பப்போ பேசிக்கிட்டுதான் இருக்கோம். நான் முதல் பாதியை ஒன்றரை மணி நேரம் சொன்னேன். ரொம்ப கவனமா அமைதியா கேட்டுக்கிட்டு இருந்தார். அதை முடிச்சுட்டு, இரண்டாவது பாதிக்கான கதையை சொல்ல ஒன்றரை மணி நேரம் தேவைப்பட்டது. முதல் பாதி ஸ்கிரிப்ட் பத்தி நிறைய விஷயங்கள் பேசிட்டுதான், இரண்டாவது பாதி சொன்னேன். அவர் ரொம்ப எக்ஸைடாகிட்டார். ‘இதுக்கு எவ்வளவு டைம் ஆனாலும் பரவாயில்லை. இதுதான் என் அடுத்தப்படமா இருக்கப்போகுது ப்ரதர்’னு சொன்னார். இதுக்கு இடையில அவரை ரெண்டு பெரிய படங்கள்ல கேட்டிருந்தாங்க. ஆனா, என்கிட்ட சொன்னதுக்காக அந்தப் படங்களுக்கு நோ சொல்லிட்டார்”

இந்தக் கதைக்கான ப்ராசஸை சிம்பு எவ்வளவு ரசிச்சு பண்றார்?

சிம்பு – தேசிங்கு பெரியசாமி

“மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி அவர் ரொம்ப ரசிச்சு ரசிச்சு தன்னுடைய கேரக்டருக்கு தயாராகிட்டு இருக்கார். நான் கதை சொன்ன போது அவருக்கு இருந்த ஆர்வத்துடனும் சந்தோஷத்துடனும் ரெடியாகிட்டு இருக்கார். இன்னுமும் அதுக்கான வேலைகள் நிறைய இருக்கு. அவர் என்கிட்ட சொன்ன விஷயம் என்னன்னா, ‘என் ரசிகர்களாகிய நீங்க இனிமே பெருமைப்படுற மாதிரிதான் நான் நடந்துக்குவேன்னு ஒரு ஆடியோ லான்ச்ல சொல்லியிருந்தேன். அதுக்காகதான் காத்திருக்கேன், அதுக்காகத்தான் உழைக்கிறேன். இதுக்குப் பிறகு வரப்போற என் படம் நிச்சயமா நான் சொன்னதை காப்பாத்துற மாதிரி இருக்கணும்’னு சொன்னார். அதனால, ஒவ்வொரு நாளும் நாங்க பேசிப்பேசி இந்தப் படத்தை சுவாரஸ்யமா உருவாக்கிட்டு இருக்கோம். எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு. அவர் கூட வேலை செய்றது ரொம்ப சுவாரஸ்யமாவும் சந்தோஷமாவும் இருக்கு”

சிம்புவைப் பத்தி சர்ச்சையான விஷயங்கள் சமூக வலைதளங்களில் பேசப்படுறது புதிதல்ல. அது தொடர்பாகவும் இந்தப் படம் தாமதமாகுறது பத்தியும் சிம்பு ஏதாவது உங்கக்கிட்டபேசினாரா ?

“இந்தப் படம் தாமதமே கிடையாது. இதுக்கான பட்ஜெட்ல இருந்து எல்லா அளவுகோலும் பெருசு. அப்போ அதுக்கான ப்ரீ ப்ரொடக்‌ஷனுக்கு நிறைய நேரம் எடுத்துக்கும். உதாரணத்துக்கு, இதுல படம் முழுக்க செட் தான். எங்கேயும் லைவ் லொகேஷன் கிடையாது. இந்தப் படத்துல வர்ற எல்லா விஷயங்களையும் கற்பனையில உருவாக்கணும். படத்துல 400 செக்மென்ட் இருக்குனா, அது எல்லாத்தையும் கான்செப்ட் ஆர்டிஸ்ட்கிட்ட கொடுத்து வரையணும். அது எல்லாமே முதல் முறையே ஓகே ஆகாது. அதுல நிறைய மெருகேத்தணும். அதை அப்படியே செட்டா போடணும். அதுல இருக்கிற சவால்கள், எதெல்லாம் வி.எஃப்.எக்ஸ்ல போகப்போறோம், அதுல எது முடியும், முடியாதுன்னு பார்த்து, அதுக்குனு சில விஷயங்கள் எல்லாம் தயார் செஞ்சுனு பல வேலைகள் இருக்கு. அதனால, இது எங்களுக்கான ப்ரீ ப்ரொடக்‌ஷனுக்காக நேரம்தான். அதை ஏன் படம் தாமதமாகுதுனு வெளியே பேசுறாங்கன்னு தெரியல. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தான் தயாரிப்பாளர். கமல் சாரைப் பத்தி எல்லோருக்கும் தெரியும். அவருடைய ப்ரீ புரொடக்‌ஷன், சினிமாவை பத்தி அவருக்கு இருக்கிற அறிவு வேற யாருக்கும் இருக்காது. இந்த கம்பெனியில படம் பண்ணும்போது, மிஸ்டேக்கே பண்ணமுடியாது. எல்லாமே பர்ஃபெக்டா இருக்கும், இருக்கணும். அதுக்கு நாம தயாராகணும். அப்படி எல்லா விதத்திலும் தயாரா இருந்தால்தான், எந்தவித குழப்பங்களும் இல்லாமல் நினைச்ச மாதிரி படம் பண்ண முடியும். ராஜமெளலி சார், ஷங்கர் சார் மாதிரியான சீனியர் இயக்குநர்களுக்கே அவங்களுடைய படங்களுக்கு மிகப்பெரிய அவ்வளவு ப்ரீ ப்ரொடக்‌ஷன் வேலைகள் இருக்கு. நான் ஒரு படம் பண்ணின இயக்குநர். அதனால, எனக்கு இன்னுமே டைம் தேவைப்படுது. அந்தப் படத்தை பத்தி எல்லோரும் பேசணும், கொண்டாடணும் அப்படிங்கிறதுக்காகதான் இப்போ உழைசுக்கிட்டிருக்கோம்.”

டான்ஸ், ஸ்டன்ட், ஹியூமர், மாஸ் மொமன்ட்ஸ் இப்படி எல்லாமே சிம்புவுக்கு சூப்பரா செட்டாகும். இந்தப் படத்துல எந்த விஷயம் ஹைலைட்டா இருக்கும் ?

சிம்பு – கமல்ஹாசன் – தேசிங்கு பெரியசாமி

“‘அவர் பயங்கர டேலன்ட். அவர் இருக்கவேண்டிய இடமே வேற’ – இதுதான் சிம்பு பத்தி எல்லோரும் சொல்ற விஷயம். ஒரு படத்துல டான்ஸ்ல ஸ்கோர் பண்ண வாய்ப்பு இருந்தால், ஸ்டன்ட் பண்ண சந்தர்ப்பம் அமையாது. ‘வெந்து தணிந்தது காடு’ படத்துல ஸ்டன்ட் சீக்வென்ஸ் சூப்பரா இருக்கும். ஆனா, டான்ஸ் ஆடுற வாய்ப்பு கிடைக்கலை. இந்தப் படத்துடைய கதையை கமல் சார் கேட்டுட்டு, ‘தம்பியுடைய ஒட்டுமொத்த திறமைகளையும் வெளிக்கொண்டு வர்ற படமா இருக்கும் இது’னு சொன்னார். சார் சொன்ன மாதிரி, அவருடைய திறமைக்கு தீனி போடுற படமா இருக்கும். அவருடைய ரசிகர்களும் பயங்கரமா என்ஜாய் பண்ணுவாங்க. இந்தப் படம் முழுக்க முழுக்க மொமன்ட்ஸ்தான். பீரியட் படம்ங்கிறதால கல்ட் கிளாசிக் ஜோன்ல எல்லாம் இருக்காது. பக்கா தர லோக்கல் பீரியட் படமா இருக்கும்”

கமல்ஹாசன்கிட்ட கதை சொல்லும்போது எப்படி இருந்தது ?

கமல்ஹாசன் – தேசிங்கு பெரியசாமி

“அதுவே பெரிய அனுபவம். ரொம்ப பயமா இருந்தது. கதை சொல்லி முடிச்சவுடன், ‘என்ன பிளான் வெச்சிருக்கீங்க, ப்ரீ ப்ரொடக்‌ஷன் ஐடியா என்ன, என்னென்ன டெக்னாலஜி பயன்படுத்தப்போறீங்க’னு நாலஞ்சு கேள்விகள் கேட்டார். அது எல்லாத்துக்குமே நமக்கு பதில் தெரியலைனா ரொம்ப கஷ்டம். கதையும் நல்லாயிருக்கணும், டெக்னிக்கலாகவும் அவர் கேட்கிற கேள்விகளுக்கு பதில் இருக்கணும் அப்படிங்கிறபோது ரொம்ப பதற்றமாதான் இருந்தது. ஆனா, கமல் சாருக்கு கதை ரொம்பப் பிடிச்சிருந்தது”

‘கே.ஜி.எஃப்’ இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்தான் இசையமைக்கிறார்னு சில தகவல்கள் வெளியாச்சு. அது உண்மையா ?

“இன்னும் எதுவும் முடிவாகல. ரெண்டு மூணு பேர்கிட்ட பேசிட்டு இருக்கோம். உறுதியானவுடன் அதிகாரப்பூர்வமா அறிவிப்பு வரும். படத்துடைய ப்ரொமோஷனை அரம்பிச்சா, அங்கிருந்து ஆடியன்ஸை லைவ்ல வெச்சுக்கணும்னு எல்லாமே ப்ளான் பண்ணிட்டு இருக்கோம்”

ரஜினி, கமல் படங்களாக இருந்தாலும் மற்ற ஊர் நடிகர்களை நடிக்க வெச்சு மல்டி ஸ்டாரர் படமா காட்டுறதுதான் இப்போ ட்ரெண்டா இருக்கு. அப்படி சிம்பு கூட நாங்க இன்னும் பல முன்னணி நட்சத்திரங்களை எதிர்ப்பார்க்கலாமா ?

“இந்த ட்ரெண்டல நாம போகல. பீரியட் படம்ங்கிறதால நிறைய கதாபாத்திரங்களுக்கான தேவை இருக்கு. அதனால, அந்தந்த கேரக்டர்களை எந்தெந்த நடிகர்கள் நடிச்சா நல்லாயிருக்கும்னு பாத்த்துட்டு இருக்கோம். மத்தபடி, தெலுங்குல இருந்து ஒருத்தர், மலையாளத்துல இருந்து ஒருத்தர்னு மார்கெட்டுக்காக பண்ண வேண்டாம். உங்கக் கதைக்கு யார் சரியா இருப்பாங்கன்னு தோணுதோ சொல்லுங்கன்னு தயாரிப்பு தரப்பிலிருந்து சொல்லியிருக்காங்க.”

இந்தப் படத்துடைய அறிவிப்பு வரும்போது, ‘காட்டுப்பசிக்கு விருந்து’னு குறிப்பிட்டிருந்தீங்க. அது சிம்புவுக்கா உங்களுக்கா?

சிம்பு – தேசிங்கு பெரியசாமி

“சிம்பு ஒரு பேட்டியில ‘நான் காட்டுப்பசியில இருக்கேன் இப்போ’னு சொல்லியிருந்தார். டான்ஸ் இப்படி பண்ணணும், ஃபைட் இப்படி பண்ணணும், இந்த சீனை எப்படி பண்றேன் பாருங்கன்னு ஹீரோக்கள் நினைப்பாங்க. எஸ்.டி.ஆருடைய அப்படியான பசிக்கு விருந்தா இந்தப் படம் இருக்கும். எந்த அப்டேட்டும் இல்லாமல் காட்டுப்பசியில இருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் இது நல்ல விருந்தா இருக்கும்”

எப்போ ஷூட்டிங் ? எப்போ ரிலீஸ்?

“ஜனவரி மாசத்துல இருந்து ஷூட்டிங் ஆரம்பிச்சிடும். ரிலீஸ் பத்தி இப்போ யோசிக்கலை. நிறைய கிராஃபிக்ஸ் இருக்கனால, எதுவும் முன்னாடியே சொல்ல முடியாது. அதெல்லாம் நாம எதிர்பார்த்த அவுட்புட் வந்த பிறகுதான், ரிலீஸ் பத்தி யோசிக்கணும்”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.