மதுரை: “மதுரை மாநகராட்சியில் வரி வசூல் மையங்களில் வரி வசூலிக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: “மாநகராட்சி 100 வார்டுகளில் ஒரே நேரத்தில் ரோடு, குடிநீர் குழாய் பதிப்பு, பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால், பணிகள் உடனுக்குடன் முடிப்பதில் தாமதம் ஏற்படுகின்றன. வடகிழக்கு பருமழை பெய்து வருவதால், ரோடுகள் அமைக்கும் பணி தடைப்பட்டுள்ளது. அதனால், தற்போது வார்டுகளில் நிலவும் மக்களுடைய அன்றாடப் பிரச்னைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாநகராட்சி வருவாய் பிரிவில் போதிய பணியாளர்கள் இல்லாததால் வரிவசூலிப்பது சிரமமாக உள்ளது. அதனால், 41 மையங்கள், 5 மண்டல அலுவலகங்களில் சொத்து வரி உட்பட அனைத்து வரிகளையும் டிஜிட்டல் முறையில் செலுத்தும் வகையில் எளிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வசதியை பயன்படுத்தி 30 சதவீதம் பேர் டிஜிட்டல் முறையில் வரிகளை செலுத்தி வருகின்றனர். பில் கலெக்டர்கள் பற்றாக்குறை நீடிப்பதால் ஒருவர் 5 வார்டுகளை கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் வரிவசூல் மையங்களில் வரி வசூலிக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கவும், அங்கு பணியாற்றும் பில் கலெக்டர்களை நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்க விரைவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.