புதுடெல்லி: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற நோட்டீஸுக்குப் பின்னரே தன் வசம் தேங்கிக் கிடந்த மசோதாக்களை ஆளுநர் ரவி திருப்பி அனுப்புகிறார் என்றால், கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
சட்ட மசோதாக்களுக்கு அனுமதியளிப்பதற்கு ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கும், மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆரீஃப் கான் காலதாமதப்படுத்துவது தொடர்பாக கேரள அரசு தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அந்த வாத – விவாதத்தின் விவரம்: அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி, “தமிழக ஆளுநர் அண்மையில் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் உள்பட 15 மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளார். சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போடுவது கவலைக்குரியது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்த நிலையில், அந்த மசோதாக்களை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பி இருக்கிறார். மசோதாக்களை தேக்கிவைத்து அரசை முடக்க ஆளுநர் முயற்சிக்கிறார்” என்றார். மாநில அரசு சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞரான பி.வில்சன், “ஆளுநர் இவ்வாறாக காலவரையின்றி மசோதாக்களை தேக்கிவைத்துக் கொள்ள அனுமதித்தால், மாநிலங்களில் நிர்வாகம் முடங்கிவிடும்” என்று வாதிட்டார்.
தொடர்ந்து, ஆளுநர் ரவி தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வேங்கடரமணிக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை முன்வைத்தனர். “ஆளுநர் ரவி தரப்பில் நவம்பர் 13-ஆம் தேதி அவர் மசோதாக்களை மாநில அரசுக்கு திருப்பியனுப்பிவிட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது. நாங்கள் இவ்வழக்கில் எங்கள் கருத்தை முன்வைத்தது நவம்பர் 10-ல். அதன் பின்னர் மூன்றே நாட்களில் ஆளுநர் மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால், இந்த மசோதாக்கள் 2020-ல் இருந்தே கிடப்பில் உள்ளன. அப்படியென்றால் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பிய பின்னர் ஆளுநர் முடிவெடுத்திருக்கிறார். மூன்றாண்டுகளாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நாடும் வரை ஏன் ஆளுநர்கள் காத்திருக்க வேண்டும்?” என்று வினவினர்.
அதற்குப் பதிலளித்த அட்டர்னி ஜெனரல் வேங்கடரமணி, ”பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் ஆளுநரின் உரிமைகளைப் பறிப்பதுபோல் சட்ட மசோதா இருந்ததால், அவற்றை மறு ஆய்வு செய்யவே ஆளுநர் திருப்பி அனுப்பினார்” என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிமன்றம், 2020 ஜனவரியில் இருந்தே மசோதாக்கள் தேங்கியுள்ளன எனச் சுட்டிக்காட்டியது. அதற்கு அட்டர்னி ஜெனரல், ”ஆர்.என்.ரவி 2021 நவம்பரில்தான் தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றார்” என்று வாதிட்டார். பதிலுக்கு உச்ச நீதிமன்ற அமர்வு, ”இங்கே பிரச்சினை ஒரு குறிப்பிட்ட ஆளுநர் மசோதாக்களை தேக்கிவைத்தார் என்பதல்ல; ஏன் பொதுவாக அளுநர்கள் மசோதாக்களை தேக்கி வைக்கின்றனர் என்பதுதான்” என்று சுட்டிக் காட்டியது.
அப்போது, ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆளுநரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைக் காத்திருப்பதாகக் கூறி வழக்கை டிசம்பர் 1-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
வழக்கு பின்னணி: தமிழக சட்டப்பேரவையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. ஆனால், 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், சட்ட மசோதாக்களுக்கு அனுமதியளிப்பதற்கு ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாவை கிடப்பில் போடுவது கவலைக்குரியது என்று தெரிவித்தது. எதுவும் செய்யாமல் கோப்புகளைக் கிடப்பில் போட முடியாது என்றும் கருத்து தெரிவித்தது.
இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நிலுவையில் உள்ளதாக தெரிவித்த பல்கலைக்கழகங்கள் திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை தமிழக அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கடந்த 18-ம் தேதி கூட்டப்பட்டு முதல்வர் கொண்டுவந்த அரசின் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் அந்த 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சில மாநிலங்களில் மட்டுமே பரவியுள்ள தொற்று! – மசோதாக்களை தாமதம் செய்வது என்பது குறிப்பிட்ட சில மாநில ஆளுநர்களை மட்டும் தொற்றிக் கொண்டுள்ளதாக கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கையெழுத்திடாததால், உச்ச நீதிமன்றத்தில் அவர் மீது கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்டு அமர்வு முன் ஆஜரான கேரள அரசின் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மற்றும் வழக்கறிஞர் சிகே சசி, அரசு அனுப்பும் மசோதாக்களை தாமதப்படுத்துவது சில மாநில ஆளுநர்களை மட்டும் ஆட்கொண்டுள்ளது என்றனர்.
வழக்கறிஞர் வேணுகோபால் வாதிடுகையில், “கடந்த 23 மாதங்களாக அரசு அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் முகமது ஆரிஃப் கான் கிடப்பில் போட்டுள்ளார். ஆளுநர் என்பவர் சட்டப்பிரிவு 168-ன் படி மாநில அரசின் ஓர் அங்கம். அப்படியிருக்க, அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் விருப்பங்களுக்கு மாறாக நடக்க இயலாது. கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் மாநில அரசு கொண்டுவந்த பொதுமக்கள் சுகாதாரம் சார்ந்த மசோதாக்களுக்குக் கூட ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியுள்ளார். மக்களின் உரிமைகளை தோற்கடிக்க ஆளுநர் முயற்சித்துள்ளார். ஆளுநரின் இந்த மெத்தனப் போக்கு கேரள மக்களின் வாழ்தலுக்கான அடிப்படை உரிமையையே அத்துமீறுவதாக உள்ளது. மிக முக்கியமான 8 மசோதாக்களை ஆளுநர் முடக்கிவைத்துள்ளார். அவற்றில் சில இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கிடப்பில் கிடக்கின்றன” என்றார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, கேரள ஆளுநருக்கும், அவரது கூடுதல் முதன்மைச் செயலருக்கும் இவ்விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது. வழக்கு விசாரணை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பணிந்த பஞ்சாப் ஆளுநர்: ஏற்கெனவே பஞ்சாப் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் தெரிவித்த கண்டனத்தைத் தொடர்ந்து, அவர் கிடப்பில் கிடந்த 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது நினைவு கூரத்தக்கது. முன்னதாக, பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக பஞ்சாப் அரசு, உச்ச நீதிமன்றத்தை நாடியது. பஞ்சாப் மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை முடிக்காமல், தொடர்ந்து மழைக்கால கூட்டத்தொடரை அரசு நடத்தியது சட்ட விரோதம் என்றும், அதில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் செல்லாது என்றும் கூறி, ஆளுநர் நிராகரித்துவிட்டதாக பஞ்சாப் அரசு முறையிட்டது,
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட பேரவையை ஒத்திவைப்பது, முடித்து வைப்பது என்பது பேரவைத் தலைவரின் முடிவுக்கு உட்பட்டது. ஆளுநர் அதில் கேள்வி எழுப்ப முடியாது. அது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாகும். பஞ்சாப் பேரவையில் ஜூன் 19,20-ம் தேதிகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செல்லும். ஆகையால், அந்த மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்க வேண்டியது கட்டாயம். மேலும், பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை காலவரையின்றி ஆளுநர் கிடப்பில் போட முடியாது. இதில் ஆளுநர் நெருப்புடன் விளையாடுகிறார்” என்று எச்சரித்தது.