புதுடில்லி:எதிர்காலத்தில் நீதிமன்ற தலையீடு இன்றி ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்மொழிவு சமர்ப்பிக்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாட்டின் 76வது சுதந்திர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, தமிழகத்தின் 33 இடங்களில் அக்., 22 மற்றும் 29ம் தேதிகளில் பேரணி நடத்த, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு அனுமதி கோரியது. இதற்கு தமிழக போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம், பேரணி நடத்த நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளித்தது.
அப்போதும் தமிழக போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதை தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ்., சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
இறுதியில், நவ., 19ல் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி நேற்று முன்தினம், தமிழகம் முழுதும் அமைதியாக பேரணி நடந்து முடிந்தது.
இதை தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கும்படி தமிழக அரசு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் நேற்று முறையிட்டது.
அப்போது நீதிபதிகள் சூர்யகாந்த், திபங்கர் தத்தா அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாங்கள் முடித்து வைக்க முடியாது. பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்வு நிறைவேற்றப்பட்டுள்ளதை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்க மனுதாரருக்கு சுதந்திரம் உள்ளது. அதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்.
எதிர்காலத்தில் நீதிமன்ற தலையீடு இன்றி ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு முன்மொழிவு சமர்ப்பிக்க வேண்டும்.
அது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஆட்சேபனை மற்றும் பரிந்துரையை பெற்ற பின், உயர் நீதிமன்றம் அதை பரிசீலிக்க வேண்டும். இதன் வாயிலாக எதிர்காலத்தில் தேவையற்ற வழக்குகளை தவிர்க்க முடியும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்