உத்தரகாசி, சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதற்கு, இரண்டு மாற்று திட்டங்களை செயல்படுத்த மீட்புக்குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.
உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பிரம்மகால் – யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்க்யாரா – தண்டல்காவ்ன் இடையே மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கடந்த 12ம் தேதி சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டபோது, சுரங்கப் பாதையின் முகப்புக்கும், தொழிலாளர்கள் பணி செய்த பகுதிக்கும் இடைபட்ட பகுதி திடீரென சரிந்து விழுந்தது.
இதில், 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கினர். ஒரு வாரமாக, அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இடிபாடுகள் வழியாக பெரிய குழாய்களை பொருத்தி, உள்ளே சிக்கியுள்ளோரை மீட்கும் பணி நடந்தது. ஆனால், திடீரென பயங்கர சத்தம் கேட்டதால், அந்த பணி நிறுத்தப்பட்டது.
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க, இரண்டு புதிய சுரங்கப்பாதைகளை உருவாக்குவது உள்ளிட்ட மாற்று முயற்சிகளை அதிகாரிகள் தற்போது செய்து வருகின்றனர்.
புதிய திட்டத்தின்படி, பிரதான சுரங்கப்பாதையின் வலது மற்றும் இடது பக்கங்களில் இருந்து கிடைமட்டமாக ஒரு சுரங்கப்பாதையும், மேற்புறத்தில் செங்குத்தாக ஒரு சுரங்கப்பாதையும் துளையிடப்படும். இது, தொழிலாளர்களை சென்றடைவதற்கான மாற்று பாதையாக இருக்கும்.
சுரங்கப்பாதையின் மேற்புறத்திற்கு செல்ல ஒரு கனரக இயந்திரம் தேவைப்படுகிறது. மலைப்பாங்கான நிலப்பரப்பாக உள்ளதால், கனரக இயந்திரத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை.
இதனால் சுரங்கப்பாதையின் உச்சிக்கு கனரக இயந்திரத்தை எடுத்துச் செல்ல ஒரு சரிவை தொழிலாளர்கள் உருவாக்குகின்றனர். இதற்கிடையே, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி சங்கத்தின் தலைவரும், பிரபல சுரங்கப்பாதை நிபுணருமான அர்னால்டு டிக்ஸ், விபத்து நடந்த சில்க்யாரா சுரங்கப்பாதை இடத்துக்கு நேற்று வந்தார்.
இது குறித்து அர்னால்டு டிக்ஸ் கூறுகையில், ”மீட்புப் பணிகள் துரிதமாக நடக்கின்றன. அனைத்து தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். தொழிலாளர்களை பத்திரமாக மீட்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்றார்.
சில்க்யாரா சுரங்கப்பாதையில் நடந்து வரும் மீட்புப் பணிகள் குறித்து, முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம், தொலைபேசியில், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக கேட்டறிந்தார். அப்போது, பிரதமர் மோடி, ‘சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் மன உறுதியை நிலைநாட்ட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் அவர்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது’ என, தெரிவித்தார்.சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கியுள்ள, 41 தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்க ஏற்கனவே, 4 அங்குல அகலமுள்ள குழாய், இடிபாடுகளுக்குள் சொருகப்பட்டிருந்தது. இதன் வழியாக ஆக்சிஜன், மருந்து, உலர் பழங்கள் உள்ளிட்டவை தொழிலாளர்களுக்கு செலுத்தப்பட்டு வந்தன. தற்போது, 6 அங்குல அகலமுள்ள புதிய குழாய், 172 அடி துாரத்துக்கு இடிபாடுகளுக்கு இடையே துாரத்துக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை கட்டுமான ஆணைய இயக்குனர் அன்ஷுல் கால்கோ கூறுகையில், ”தற்போது செலுத்தப்பட்டுள்ள புதிய குழாய் வழியாக, உள்ளே சிக்கிய தொழிலாளர்களுக்கு ரொட்டி, சப்ஜி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்க முடியும்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்