இலத்திரனியல் ஊடகங்களுக்கான ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டமொன்றை ஸ்தாபிக்குமாறு ஊடகங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சரவைக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (21) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஊடகத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலத்திரனியல் ஊடகங்களுக்காக ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டத்தை உருவாக்குவதற்கான யோசனையானது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாத்து, ஊடகத்தை உறுதி செய்வதாகும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
இந்த வரைபுகளை மேலும் விவாதிக்கவும், சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களைப் பெறவும் அமைச்சரவையினால், நீதி சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவை உபகுழுவைக் கூட்டியதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
இலத்திரணியல் ஒலிபரப்பாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய கட்சிகள் வரைவுச் சட்டமூலத்தில் தேவையான திருத்தங்களைச் சுட்டிக்காட்டிய சில விடயங்களை கையாள்வதற்கு இந்த உபகுழு நெகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், சங்கத்தின் அபிப்பிராயங்களைப் பெற்று அசல் சட்டமூலத்தில் பல மாற்றங்களைச் செய்து புதிய அடிப்படை சட்டமூலம் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
அமைச்சரவையில் முன்மொழிவை தாம் சமர்ப்பித்ததாகவும், இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு சட்டம் தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.