புதுடெல்லி: இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh), “இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது” என டெலிகிராமில் தெரிவித்துள்ளார். கத்தார் இருதரப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இரண்டு தரப்பிலும் சுமுக முடிவு விரையில் எட்டப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில். இஸ்ரேல் 5 நாள் போர் நிறுத்தமும், தெற்கு காசா உட்பட காசாவின் பகுதிகளில் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை நிறுத்தவும் அந்த பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதற்குப் பதிலாக, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் ஆகியோரின் பிணையில் உள்ள 50 முதல் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இதில் ராணுவ வீரர்களை வெளியேற்ற வாய்பில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே விரைவில் உடன்பாடு ஏற்படும் என நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி என்ன?: இஸ்ரேல் நாட்டின் மீது அக்டோபர் 7-ம் தேதியன்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழு திடீர் தாக்குதலைத் நடத்தியது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலும் தொடர்ந்து தன்னுடைய எதிர்த் தாக்குதலை நடந்தி வருகிறது. இந்த மோதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் உலக நாடுகள் இரண்டாகப் பிரிந்து கிடக்கின்றன. இதற்கிடையே போரை நிறுத்தி காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்ய இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்தன. ஆனால், பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என் இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு இன்னும் நிரந்தர முடிவு எட்டப்படவில்லை. இந்தத் தாக்குதல்களில் இஸ்ரேலில் ஏறத்தாழ 1,200 பேர் கொல்லப்பட்டனர். 239 பேரை காசா பகுதிக்குள் கடத்திச் சென்றனர். இதனால், இஸ்ரேல் ராணுவம் காசாவின் வட பகுதியில் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடந்த தாக்குதலில் காசாவில் 13,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.