புதுடெல்லி: உத்தராகண்ட் சுரங்க விபத்து குறித்து செய்திகளை வழங்கும் செய்தி தொலைக்காட்சிகள், பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் செய்தியாக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கடந்த 12-ம் தேதி அதிகாலை மண் சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதையின் நடுவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க 8 அரசு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இரவு பகலாக முயற்சி செய்து வருகின்றனர். 10-வது நாளாக இன்று மீட்புப் பணி தொடரும் நிலையில் பைப் மூலம் எண்டோஸ்கோபி கேமராவை செலுத்தி அங்குள்ள தொழிலாளர்களுடன் மீட்புக் குழுவினர் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். தொழிலாளர்களின் முதல் காட்சி வெளியாகி மீட்புக் குழுவினருக்கு உத்வேகத்தையும், தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.
இதனிடையே, சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள பல்வேறு செய்தி தொலைக்காட்சிகள் அங்கிருந்தவாறு செய்திகளை வழங்கி வருகின்றன. இதை கருத்தில் கொண்டு மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கி உள்ளது. “சுரங்கப்பாதைக்கு அருகே நெருக்கமாகச் சென்று வீடியோ பதிவு செய்வது, காட்சிகளை நேரலையிலும், பதிவு செய்தும் ஒளிபரப்புவது போன்ற பணிகளை பல்வேறு செய்தித் தொலைக்காட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. செய்தி சேகரிக்கும் ஆர்வத்தில், மீட்புப் பணிகளுக்கு எவ்வித தொந்தரவையும் யாரும் ஏற்படுத்திவிடக்கூடாது.
அதேபோல், மீட்புப் பணிகள் குறித்த செய்திகளை வழங்கும்போது பொறுப்புணர்வுடன் செய்திகளை வழங்க வேண்டும். தொலைக்காட்சி செய்திகளை, உள்ளே இருக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து செய்திகளை வழங்க வேண்டும். பொதுமக்களுக்கும் அச்சத்தை அல்லது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வழங்கக் கூடாது. அவ்வாறு செய்திகளை வழங்குவது நடந்துகொண்டிருக்கும் செயல்பாடுகளை மோசமாக பாதிக்கும்” என மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.