ஜெய்ப்பூர்: ஊழல், வாரிசு அரசியல், தாஜா செய்யும் போக்கு ஆகியவற்றின் அடையாளமாக காங்கிரஸ் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானின் பரண் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியா வளர்ந்த நாடாக ஆகாமல் 3 தீய சக்திகள் தடுத்துக்கொண்டிருக்கின்றன. ஊழல், வாரிசு அரசியல், தாஜா செய்யும் போக்கு ஆகியவையே அந்த 3 தீய சக்திகள். இந்த 3 தீய சக்திகளின் அடையாளமாக காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரோ, அமைச்சரோ அவர்கள் கட்டுப்படுத்த முடியாதவர்களாக இருக்கிறார்கள். இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
கொள்ளையர்கள், கலவரக்காரர்கள், கொடுங்கோலர்கள், குற்றவாளிகள் ஆகியோரிடம் ராஜஸ்தான் மக்களை காங்கிரஸ் ஒப்படைத்துள்ளது. இதன் காரணமாக, இன்று, ராஜஸ்தானில் குழந்தைகள் கூட ‘அசோக் கெலாட், உங்களுக்கு வாக்குகள் கிடைக்காது’ என்று கூறுகிறார்கள். ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. ராஜஸ்தானின் சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு எதிராக அராஜகம் செய்தவர்களுடன் காங்கிரஸ் அமைச்சர்கள் கூட்டு சேர்ந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் இத்தகைய ஆதரவால் ராஜஸ்தானில் சமூக விரோத சக்திகள் வலிமையாக இருக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்ததும், பெண்கள் நலனையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கும்” எனத் தெரிவித்தார்.