டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தளபதிகள் 3 பேர் ஒரே நாள் இரவில் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை நேற்று தெரிவித்தது.
இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர், காசா முனையில் 250 பயங்கரவாத இலக்குகளை தாக்கி அழித்துள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. கடந்த 24 மணிநேரத்தில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் பல்வேறு இலக்குகளை அவர்கள் தாக்கி அழித்தனர்.
இதன் ஒரு பகுதியாக, பயங்கரவாதிகள், ராக்கெட் ஏவுகலன்கள் மற்றும் பல்வேறு பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு தாக்குதல்கள் நடந்தன.
இதேபோன்று, இரவில் நடந்த தாக்குதலில் காசா பிரிவில், ஹெலிகாப்டர் ஒன்று, ராக்கெட் ஏவுதளத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இதன்பின், கிரேட்டர் டெல் அவிவ் பகுதிக்கு உட்பட்ட கஷ் டான் என்ற இடத்தில் ராக்கெட்டுகள் அடுத்தடுத்து தாக்குதலை நடத்தின. தொடர்ந்து தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது.