கேப்டன்சி குறித்த விமர்சனங்களுக்கு மனம் திறந்த தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா!

கேப்டவுண்,

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த மாதம் 5ஆம்தேதி தொடங்கி 7 வார காலங்களாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த தொடரில் பங்கேற்றிருந்த டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி லீக் சுற்று முடிவில் 2-வது இடம் பிடித்து அசத்தியது. ஆனால் அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் போராடி தோல்வியடைந்து வெளியேறியது.

ஒரு கேப்டனாக அணியை வெற்றிகரமாக வழிநடத்திய பவுமா ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு குறைந்த அளவிலேயே பங்களித்தார். இந்த உலகக்கோப்பை தொடரில் 8 ஆட்டங்களில் விளையாடி வெறும் 145 ரன்கள் மட்டுமே அடித்தார். இதனால் அவரின் கேப்டன்சி குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் கேப்டன்சி குறித்த விமர்சனங்களுக்கு மனம் திறந்த தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா பேசுகையில்,‘ சமூக வலைதளங்களில் என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க போவதில்லை. நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அணியின் நலனுக்காக எடுக்கப்படுகிறது. 100 சதவீதம் விளையாடவில்லை என்றாலும், உடைந்த விரல்களுடன் நாட்டுக்காக நன்றாக விளையாடினேன்’ என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.