சென்னை: சட்ட விரோத செயல்களை தடுக்கும் வகையில் சிறை வளாகங்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க சிறைத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆரம்ப கட்ட பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக சிறைகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், விசாரணைக் கைதிகள் மற்றும் பெண்கைதிகள் தனித்தனியாக அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், வெளிநாட்டைச் சேர்ந்த கைதிகளும் தமிழக சிறைகளில் உள்ளனர். இவர்கள் அனைவரின் செயல்களையும் சிறைக் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த கண்காணிப்பை மீறி அவ்வப்போது சிறைக்குள் சிறிய அளவில் மோதல், பிரச்சினை ஏற்பட்டு விடுகிறது. மேலும், போதைப்பொருட்கள் நடமாட்டம், தடையை மீறி செல்போன் பயன்பாடும் அவ்வப்போது நடைபெற்று விடுகிறது. இவற்றை கண்காணித்து, தவறுசெய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், சிறைக்குள் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில், கண்காணிப்பை மேலும் அதிகரிக்கும் வகையிலும்,சட்ட விரோதச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தமிழகத்தில் உள்ள புழல், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட 9 மத்திய சிறை வளாகங்கள், சுற்றுச்சுவர்கள் மற்றும் வெளிப்புறங்களை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க சிறைத் துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான ஒப்புதலைப் பெற தமிழக அரசுக்கு, சிறைத்துறை அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு அதன் மூலம் கண்காணிப்பதன் மூலம் சிறை வளாகத்தில் நடக்கும் அனைத்தையும் துல்லியமாக காண முடியும்.
இதன் மூலம் அத்துமீறல்கள் முற்றிலும் குறைய வாய்ப்பு உள்ளது. அத்துடன் சில நேரங்களில்கைதிகள் சட்ட விரோத செயல்களில்ஈடுபட்டால் அவற்றை ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிப்பதன் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். இதனால் அவர்கள் அதுபோன்ற செயலில் ஈடுபடுவதை தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது.
எனவே, விரைவில் ட்ரோன் கேமரா வாங்கப்பட்டு சிறை வளாகத்தில் பறக்கவிடப்பட்டு கண்காணிக்கப்படும் என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.