சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை மீட்க சர்வதேச குழு தீவிரம்: செங்குத்தாக துளையிட 2 இடங்கள் தேர்வு

டேராடூன்: உத்தராகண்டில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு கடந்த 12-ம் தேதி அதிகாலை மண் சரிவு ஏற்பட்டு 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதையின் நடுவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க 8 அரசு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் இரவு பகலாக முயற்சி செய்து வருகின்றனர். 9-வது நாளாக நேற்றும் மீட்புப் பணி தொடர்ந்தது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ் உத்தராகண்ட் சுரங்கப் பாதையை நேற்று நேரில் ஆய்வு செய்தார். சர்வதேச சுரங்க கூட்டமைப்பின் தலைவரான அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இமயமலையின் புவியியல் அமைப்பை நன்கறிந்த நிபுணர்கள் என்னோடு உள்ளனர். கடந்த 9 நாட்களாக சுரங்கப் பாதையில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்க முடியும் என்று நம்புகிறேன். தொழிலாளர்களை மீட்க உலகம் முழுவதும் இருக்கும் சுரங்க நிபுணர்கள் ஆன்லைனில் ஆலோசனை வழங்கி வருகின்றனர். இந்திய நிபுணர்கள் உட்பட சர்வதேச நிபுணர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அர்னால்டு கூறினார்.

உத்தராகண்ட் பேரிடர் மீட்புப் படை வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது 70 மீட்டர் தொலைவுக்கு மணல், கடினமான பாறைகள் சுரங்கத்தை மூடியிருக்கிறது. உட்பகுதியில் ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு மண் சரிவு இல்லை. அந்த பகுதியில்தான் 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அங்கு மின் விளக்கு வசதி இருக்கிறது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழாய்கள் வழியாக ஆக்சிஜன், உணவு வகைகள் அனுப்பப்படுகிறது.

முதலில் ஜேபிசி இயந்திரம் மூலம் மண் சரிவை அகற்ற முயன்றோம். அப்போது மேலும் மண் சரிவு ஏற்பட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அடுத்து ராட்சத இயந்திரங்கள் வாயிலாக மணல் குவியலின் பக்கவாட்டில் துளையிட்டு இரும்பு குழாய்களை செலுத்த முயன்றோம். அந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை.

கடந்த 2015-ம் ஆண்டில் இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூரில் இதேபோன்ற சுரங்க விபத்து ஒன்றில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அப்போது சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து துளையிட்டு தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

இந்த அனுபவத்தை முன்மாதிரியாக கொண்டு தற்போது உத்தராகண்ட் சுரங்கப் பாதையின் மேற்பகுதியில் செங்குத்தாக துளையிட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக குஜராத், ஒடிசாவில் இருந்து புதிதாக ராட்சத துளையிடும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

இவற்றின் எடை அதிகம் என்பதால்விமானத்தில் கொண்டு வர முடியாது.எனவே ரயில்கள் மூலம் உத்தராகண்ட் கொண்டு வரப்பட்டு கனரக லாரிகள் மூலம் சம்பவ இடத்துக்கு எடுத்துச் செல்ல உள்ளோம்.

சர்வதேச சுரங்க நிபுணர் அர்னால்டு டிக்ஸ், சுரங்கத்தின் மேற்பகுதியில் 2 இடங்களை தேர்வு செய்துள்ளார். இந்த இரு இடங்களில் இருந்துசுரங்கத்தின் அடிப்பாகம் வரை துளையிடப்படும். முதல் இடத்தில் 24அங்குலம் அளவுக்கு துளையிடப்படும். இந்த பணி 2 நாளில் நிறைவடையும். இதன்மூலம் தொழிலாளர்களுக்கு உணவு வகைகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

இரண்டாவது இடத்தில் சுமார் 1.2 மீட்டர் விட்டத்தில் அடிப்பாகம் வரை துளையிடப்படும். இதன்மூலம் தொழிலாளர்களை மீட்க திட்டமிட்டு உள்ளோம். இந்தப் பணிக்கு 5 நாட்கள் வரை ஆகலாம்.

கடந்த 16-ம் தேதி மீட்புப் பணி நடைபெறும் இடத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டது. அப்போது மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டு, பல மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது. எனவே மீட்புப் பணி எப்போது நிறைவடையும் என்பதை உறுதியாகக் கூற முடியாது.

இவ்வாறு மாநில பேரிடர் மீட்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் மோடி ஆலோசனை: சுரங்கப் பாதையில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்பது தொடர்பாக மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் மோடி தினமும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன்படி பிரதமர்மோடி நேற்றும் முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொழிலாளர்களின் நிலவரம் குறித்தும் மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.