“ஜம்மு காஷ்மீரில் 14 மணி நேரம் மின்வெட்டு; துரோகம் இழைக்கப்படுகிறது” – மத்திய அரசை சாடிய ஒமர் அப்துல்லா

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரில் 14 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது என்றும் மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு துரோகம் இழைத்துருக்கிறது என்றும் அம்மாநிலத்தின் முன்னாள் முதலவர் ஒமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.

குல்காமில் நடந்த பேரணியில் ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, “நாங்கள் ஏமாந்து போகிறோம். தேர்தல், வேலைவாய்ப்பின்மையை தீர்ப்போம், வளர்ச்சியடையச் செய்வோம் என்ற பெயரில் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசால் துரோகம் இழைக்கப்படுகிறது. இதுநாள்வரை மின்வெட்டுக்கு தீர்வு காணப்படாதது ஏன்? இன்று, பணம் ஏராளமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது, 14 மணி நேரமும் மின்வெட்டு ஏற்படுவதற்கான காரணம் என்ன?

காஷ்மீரில் பல்வேறு மனப்பான்மை கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்றால், அதற்கு 370-வது பிரிவுதான் காரணம். 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை. 370 வது பிரிவை ரத்து செய்தால், துப்பாக்கி சண்டைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், இந்த பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று ஒருவாரம் கூட ஆகவில்லை. 5 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களை பயங்கரவாதிகள் என்று அரசே தெரிவிக்கிறது. நீங்கள் ஜம்மு-காஷ்மீர் மக்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களையும் ஏமாற்றிவிட்டீர்கள்” என்று கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி தலைவருமான மெகபூபா முப்தியும் ஜம்மு காஷ்மீரில் நிலவும் மின் நெருக்கடி குறித்து கடும் கவலை தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.