சென்னை: ரயில் ஓட்டுநர்கள் ஒவ்வொரு பயணத்துக்கு பிறகும் உதவி ஓட்டுநர்களின் செயல்திறனை மதிப்பிட வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சமீபகாலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில் தடம்புரள்வது, சிக்னல் பிரச்னை, ரயில்கள் நேருக்கு நேர் மோதல், தீ விபத்து போன்ற விபத்துகள் தொடர்ந்து நேரிட்டன. குறிப்பாக, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநகர் பஜார் பகுதியில் கடந்த ஜூன் 2-ம் தேதி நடந்த விபத்தில் 280 பேர் உயிரிழந்தனர். 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, ரயில்பயண பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒவ்வொரு மண்டலத்திலும் சிக்னல், தண்டவாளம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுகளில் ஆய்வு செய்யவும், அதில் பழுதடைந்ததை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில்நிலைய அதிகாரி அறை, சிக்னல் கையாளும் (பேனல், ரிலே) அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வீடியோ பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்காலத்தில் தரமான ரயில் ஓட்டுநர்களை உருவாக்கும் விதமாக, உதவி ஓட்டுநர்களின் பணிகளை தினமும் கண்காணித்து, அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கை:
ரயிலில் 8 முதல் 10 மணி நேரம் பணிபுரியும் ஓட்டுநரால் (லோகோ பைலட்), உதவி ஓட்டுநர்களின் செயல் திறனை மதிப்பிட தற்போது எந்த நடைமுறையும் இல்லை. ஆனால், ஒவ்வொரு பயணத்துக்கு பிறகும், இவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும். இது அவர்களது பணித்திறனை மேம்படுத்தும். எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த லோகோபைலட்டாக உருவாக வழிவகுக்கும். எனவே, ஒவ்வொரு பயணத்துக்கு பிறகும் ரயில் ஓட்டுநர்கள் கையொப்பமிடும்போது, உதவி ஓட்டுநர்களின் செயல்திறனை மதிப்பிட வேண்டும். ரயில்வே தகவல் முறை மையத்தில் (CRIS) இந்த விவரங்கள் பதிவு செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட6 கோட்டங்களில் 1,650 ஓட்டுநர்கள், 1,800 உதவி ஓட்டுநர்கள் உள்ளனர். ரயில் இயக்கும் ஓட்டுநர்களுக்கு போதிய ஒத்துழைப்பு கிடைப்பது இல்லை. அசம்பாவிதம் நடந்தால் அவர்களே முழு பொறுப்புஏற்கவேண்டி உள்ளது.இதனால்தான், உதவி ஓட்டுநர்களின் பணியைகண்காணித்து, அன்றாடம் தர மதிப்பு செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. உதவி ஓட்டுநர்கள் மத்தியில் இதுஅதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தேவையற்ற நடைமுறை என்று அகில இந்திய ரயில்ஓட்டுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் மத்திய அமைப்பு செயலாளர் பாலசந்திரன் கூறியபோது, ‘‘ஏற்கெனவே ஓட்டுநர்கள், உதவி ஓட்டுநர்களின் பணியை மேற்பார்வை, ஆய்வு செய்ய இன்ஜின்களில் கேமராக்கள் உள்ளன. பணிகளை ஆய்வு செய்ய லோகோ ஆய்வாளர்கள் என்ற தனிப்பிரிவும் உள்ளது. இந்த நிலையில், உதவி ஓட்டுநர்களின் பணியை ஓட்டுநர்கள் ஒவ்வொரு முறையும் மதிப்பிட வேண்டும் என்பது தேவையற்றது. ஏற்கெனவே ஓட்டுநர்களுக்கு பணிகள் அதிகம் உள்ள நிலையில், இது சாத்தியமற்றதும்கூட. மேலும், தனிமனித விருப்பு வெறுப்புஅடிப்படையில், குறை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் முடிந்து விடவும்வாய்ப்பு உள்ளது. இதனால், ரயில்வேயின் நோக்கம் வீணாகிவிடும்’’ என்றார்.